×

ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கியதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை: காங்கிரஸ் கருத்தால் மீண்டும் சர்ச்சை

புதுடெல்லி: ‘மவுண்ட்பேட்டன், ராஜாஜி மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோர் செங்கோலை, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாக குறிப்பிட்டதற்கான எந்த வரலாற்று ஆவணமும் இல்லை’ என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் தந்துள்ளார். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது, சோழர் காலத்து பராம்பரியபடி பிரதமர் மோடியின் செங்கோல் வழங்கப்பட இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது: கடந்த 1947ம் ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் மாதம், மதராஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மத அமைப்பால் உருவாக்கப்பட்ட கம்பீரமான செங்கோல் நேருவுக்கு வழங்கப்பட்டது உண்மைதான்.

ஆனால், அந்த செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாக மவுண்ட்பேட்டன், ராஜாஜி, ஜவகர்லால் நேரு ஆகியோர் கூறியதற்கு எந்த ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரமும் இல்லை. இந்த கூற்றுகள் அனைத்தும் வெறுமையானவை, ஆதாரமற்றவை, போலியானவை. இது அனைத்தும் சிலர் மனதில் முழுமையாக கற்பனை செய்யப்பட்டு இட்டுகட்டி வாட்ஸ்அப்பில் பரவி, இப்போது தம்பட்டம் அடிப்பவர்களிடம் சிக்கி இருக்கிறது. ராஜாஜியை பற்றி நன்கு அறிந்த சிலர் இதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தின் பொய்யான செய்திகளுடன் புதிய நாடாளுமன்றம் புனிதப்படுத்தப்படுவதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

பாஜ, ஆர்எஸ்எஸ் திரிபுவாதிகள் மிகைப்படுத்திய பேச்சு, குறைந்தபட்ச ஆதாரங்கள் கொண்டவர்கள் என்பதை மீண்டும் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல், 1947ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இதுதான் உண்மை. தமிழகத்தில் அவர்களுக்கு இருக்கும் அரசியல் தேவைகளுக்காக பிரதமரும் அவரது ஆதரவாளர்களும் செங்கோலை பயன்படுத்துகிறார்கள். இவர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக உண்மைகளை திரிக்கிறார்கள். புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஏன் அழைக்கவில்லை என்பதுதான் உண்மையான கேள்வி. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்திய கலாச்சாரத்தை காங். ஏன் வெறுக்கிறது?
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டரில், ‘காங்கிரஸ் கட்சி ஏன் இந்திய மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை மிகவும் வெறுக்கிறது? இந்தியாவின் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் நேருவுக்கு புனிதமான செங்கோல் தமிழ்நாட்டின் புனித சைவ மடத்தால் வழங்கப்பட்டது. ஆனால் அது ஒரு ‘வாக்கிங் ஸ்டிக்’ ஆக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இப்போது, காங்கிரஸ் மற்றொரு வெட்கக்கேடான செயலை செய்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தின் வரலாறு போலியானது என்கிறது.

அவர்களின் நடத்தையை காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். பாஜ தேசிய தலைவர் ஜேபி.நட்டா கூறுகையில், ‘‘புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் பெரும்பாலான கட்சிகளை எது இணைக்கிறது? பதில் எளிது- அவை வாரிசு அரசியல் கட்சிகள். அதன் முடியாட்சி முறைகள், நமது அரசியலமைப்பில் உள்ள குடியரசு மற்றும் ஜனநாயக கொள்கைகளுடன் முரண்படுகின்றன,’’ என்றார்.

The post ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கியதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை: காங்கிரஸ் கருத்தால் மீண்டும் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Congress ,New Delhi ,Mountbatten ,Rajaji ,Jawaharlal Nehru ,India ,
× RELATED திருப்திபடுத்தும் அரசியலை எதிர்க்கட்சிகள் நாடுகின்றன: பாஜ விமர்சனம்