×

நீலகிரி அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருட முயற்சி கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு: ரோந்து போலீசாரின் அதிரடியால் பணம் தப்பியது; மதுபாட்டில்களை வீசி தாக்கியதில் 2 காவலர்கள் காயம்

பந்தலூர்: நீலகிரி அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து பணத்தை திருடிய கொள்ளையனை துப்பாக்கியால் போலீசார் சுட்டுப்பிடித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள கூந்தலாடியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சூபர்வைசர் சிவக்குமார் உள்பட 4 பேர் பணியாற்றி வருகிறார்கள். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்த பின்னர் வசூலான ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்து பையில் சூபர்வைசர் வைத்துக்கொண்டார். மீதமுள்ள ரூ.35 ஆயிரத்தை கல்லா பெட்டியிலும், சில்லரையாக இருந்த 100, மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அட்டைப்பெட்டியிலும் வைத்தார். பின்னர் கடையை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று அதிகாலை டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து 3 கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். அப்போது அந்த வழியாக கூடலூர் சிறப்பு காவல்படை (கிரைம் பிராஞ்ச்) போலீசார் ஜீப்பில் ரோந்து சென்றனர். டாஸ்மாக் கடை ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து உஷாரான போலீசார் கடைக்குள் சென்று பார்த்தனர். உள்ளே இருந்த 3 கொள்ளையர்களையும் பிடிக்க முயன்றனர். அப்போது 3 கொள்ளையர்களும் போலீசாரை தாக்க முயன்று ஓட்டம் பிடித்தனர். போலீசார் விடாமல் அவர்களை விரட்டிச்சென்றனர். ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் போலீசார் மீது மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு கொள்ளையனின் தொடையில் குண்டு துளைத்தது. அவர் சரிந்து விழுந்தார். அவரை போலீசார் பிடித்தனர். மற்ற 2 கொள்ளையர்களும் தப்பி ஓடிவிட்டனர். குண்டு காயம் அடைந்த கொள்ளையன் மற்றும் மது பாட்டில் வீச்சில் காயமடைந்த 2 போலீசார் உள்பட 3 பேரும் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் தேவாலா டிஎஸ்பி செந்தில்குமார், கூடலூர் டிஎஸ்பி செல்வராஜ், பந்தலூர் தாசில்தார் நடேசன், துணை தாசில்தார் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கொள்ளையனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் பந்தலூரை அடுத்த பாட்டவயல் கொட்டாடு பகுதியை சேர்ந்த பிஜீஷ் (எ) சாம்பார் மணி (45) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. கொள்ளைக்கு பயன்படுத்திய கேரள பதிவு எண் கொண்ட கார் மற்றும் கொள்ளை போன பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். டாஸ்மாக் கடை சூபர்வைசர் சிவக்குமாரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர் அரசு மருத்துமனைக்கு நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர் மற்றும் கோட்டாட்சியர் குதிராதுல்லா ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தடயவியல் நிபுணர்களுடன் டாஸ்மாக் கடைக்கு சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் பணம் அப்படியே இருந்தது. மதுபாட்டில்களும் திருட்டு போகவில்லை. சில்லரையாக வைத்திருந்த பணம் மட்டுமே கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

The post நீலகிரி அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருட முயற்சி கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு: ரோந்து போலீசாரின் அதிரடியால் பணம் தப்பியது; மதுபாட்டில்களை வீசி தாக்கியதில் 2 காவலர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : tasmac ,Nilgiri ,Bandalur ,Tasmak ,Nilgiri District ,Nilgiris ,Dinakaran ,
× RELATED அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலை...