×

கடந்த 2006ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஒரு சதுர அடி நிலத்தைக்கூட கூடுதலாக நானோ, குடும்பத்தினரோ வாங்கவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: கடந்த 2006ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஒரு சதுரஅடி நிலத்தை கூட கூடுதலாக நானோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வாங்கவில்லை, பதிவு செய்யவில்லை. இனிமேலும் வாங்கப்போவது இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் நேற்று வருமான வரி அதிகாரிகள் சென்னை, கரூர், கோவை ஆகிய இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நடந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இருந்தார். சென்னை, தலைமை செயலகம் வந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சம்பந்தமாக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.

பின்னர் சென்னை, தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எனது சகோதரர், உறவினர்கள், நண்பர்களின் வீடு மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்களின் இடங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எனது வீட்டில் சோதனை எதுவும் நடக்கவில்லை. சோதனை நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். இதுபோன்ற சோதனைகளை நாங்கள் எதிர்கொள்வது புதிது அல்ல. சட்டமன்ற தேர்தலுக்கு இறுதி பிரசாரத்திற்கு முன்பதாக இதுபோன்ற வருமான வரித்துறையினரின் சோதனைகளை எதிர்கொண்டோம்.

பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில், என்னை அவசியம் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அழைத்தனர். வாக்குப்பதிவுக்கு முன்பாக என்னை வரவழைத்து, இறுதிக்கட்ட பிரசாரத்தை முன்னெடுப்பதை தடுப்பதற்கு, சோதனை என்ற பெயரில் முயற்சி செய்வதாக தெரிந்தது. எனவே, பிரசாரம் முடியட்டும், என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். வீடுகளுக்கு முழுவதுமாக சீல் வைத்தாலும் சரி, பெற்றோர் முன்னிலையில் சோதனையை நடத்தி அவர்களிடம் கையெழுத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினேன். மேலும், தேர்தல் முடிந்த பிறகு அதற்கான விளக்கங்களை வழங்க தயார் என்று தெரிவித்தேன்.

வருமான வரித்துறையினர் சோதனை தேர்தலுக்கு முன்னதாகவும் நடந்தது. இப்போதும் எனது வீடு தவிர சகோதரர், உறவினர், நண்பர்களின் இல்லத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. சோதனை நடக்கும் இடங்களைச் சேர்ந்த அனைவருமே வருமான வரி செலுத்தி வருபவர்களாகும். அவர்கள் வரி ஏய்ப்பவர்கள் அல்ல. ‘அட்வான்ஸ் டாக்ஸ்’ கட்டியுள்ளனர். வருமான வரி அதிகாரிகள் தொடர்பான விரும்பத்தகாத சம்பவங்களை தொடர்ந்து, உடனடியாக கரூருக்கு நான் தொடர்புகொண்டு, யாரும் சோதனை நடக்கும் இடங்களில் இருக்கக் கூடாது என்றும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கூறினேன். உடனே அவர்கள் கலைந்து சென்றுவிட்டனர்.

காலையில் எனக்கு ஒரு வீடியோ பதிவு வந்தது. அதிகாலையில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், சோதனைக்கு வருமான வரித்துறையினர் சென்றனர். அவர்கள் அழைப்பு மணியை அடித்துவிட்டு சற்று நேரம் வீட்டின் முன்பு காத்திருக்கவில்லை. வீட்டில் ஆட்கள் இருப்பதால் நிச்சயம் வந்து கதவை திறப்பார்கள். ஆனால், முகத்தை கழுவிவிட்டு வந்து கதவை திறப்பதற்கு முன்பாகவே ‘கேட்’டில் அதிகாரிகள் ஏறிக் குதித்து உள்ளே சென்றிருக்கின்றனர். மணி அடித்ததும் உடனே கதவை திறந்துவிட முடியுமா, அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் பற்றி விசாரிக்க வேண்டும்.

அந்த விசாரணை முடியும் வரை, சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுதான் கடமையாகும். அதிமுக கட்சியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் ரெய்டு நடந்தபோது, கட்சி நிர்வாகிகளை வரவழைத்து, பந்தல் அமைத்து, சாப்பாடு போட்ட நிகழ்வெல்லாம் நடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடந்தபோது எப்படியெல்லாம் கதறினார்கள். ஜெயக்குமார் அப்போது என்ன கருத்தைத் தெரிவித்தார். இப்போது என்ன கூறுகிறார் என்பதை கவனிக்க வேண்டும். 2006ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஒரு சதுரஅடி நிலத்தை கூட கூடுதலாக நானோ எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வாங்கவில்லை, பதிவு செய்யவில்லை. இனிமேலும் அதுபோன்ற நடவடிக்கையில் எப்போதும் ஈடுபடமாட்டோம்.

எனது தம்பியின் மாமியார் தனது மகளுக்கு (தம்பி மனைவிக்கு) சொத்துகளை தானமாக கொடுத்தார். கணவர் இறந்த பிறகு தன்னிடம் உள்ள சொத்துகளை பிள்ளைகளுக்கு தாயார் கொடுப்பது இயல்பானதுதான். தம்பி மனைவி பெயருக்கு வந்த இடத்தில் வீடு கட்டப்படுகிறது. ஆனால் அதிலுள்ள உண்மைத்தன்மை தெரியாமல் தவறான தகவல்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். எங்கள் குடும்பத்தில் இதுவரை 2006ம் ஆண்டுக்கு பிறகு எந்தவிதமான புதிய சொத்துகளை வாங்கவில்லை. இனி வாங்கவும் மாட்டோம். அதை தேர்தலின்போதும் கூறியிருக்கிறேன். புதிய சொத்துகள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்க மாட்டோம். இப்போது இருக்கும் சொத்துகளும், மக்கள் அளிக்கும் அங்கீகாரமும் எங்களுக்கு போதுமானது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கடந்த 2006ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஒரு சதுர அடி நிலத்தைக்கூட கூடுதலாக நானோ, குடும்பத்தினரோ வாங்கவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nano ,Minister ,Senthil Balaji ,Chennai ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம்...