சென்னை: டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் திறந்து வைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில், திமுக உறுதியாக இருக்கிறது என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 2023-24ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவடி, அண்ணனூர், கோனாம்பேடு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இதுபோல் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி கரையான்சாவடியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமாபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பகுதிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, முன்னாள் அமைச்சரும், ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான நாசர் ஆகியோர் நேற்று காலை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர்பாபு கேட்டறிந்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 34 திட்டங்கள் மற்றும் 26 சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் அறிவித்திருந்தோம். 34 இடங்களிலும் நேரடியாக கள ஆய்வு செய்து பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலைஞர் ஆட்சி காலத்தில் இருந்து ஒன்றிய அரசுடன் உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடுதான் இயங்கி வருகிறோம். அண்மையில் ஆளுநருடன் ஏற்பட்ட சர்ச்சையின்போதுகூட முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக விளக்கி கூறினார். டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முதான் திறக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்கிறது.
ஜனாதிபதி திறந்து வைத்தால்தான் ஏற்புடையதாக இருக்கும் என்பது முதல்வரின் நிலைப்பாடு. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்த ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ஜி.ஆர்.திருமலை, நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத்தலைவர் ஸ்ரீதர் மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
The post புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்கவேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.