புதுடெல்லி: புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி திறந்து வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். அதுதான் மரபாகும். பிரதமர் திறப்பது குடியரசுத் தலைவரின் மாண்பை குறைப்பது மட்டுமில்லாமல், அரசியலமைப்பு சட்டத்தையே மீறும் செயலாகும். அதனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு மக்களவை செயலகத்திற்கு ஒரு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவானது உச்ச நீதிமன்ற கோடைக்கால விடுமுறை அமர்வில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நரசிம்மா ஆகியோர் அமர்வில் நேற்று அவசர வழக்காக பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் ஜெய்சுகின் வாதத்தில்,‘‘புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் அரசியல் அமைப்பு சட்டத்தின் 79வது பிரிவு மீறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தான் நாடாளுமன்றத்தின் தலைவர். அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதில் அவரது மாண்பை குறைக்கும் வகையில் மக்களவை செயலகம் செயல்பட்டுள்ளது. இவ்வாறு தன்னிட்சையாக மக்களவை செயலகம் எப்படி முடிவெடுக்க முடியும்? என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி,\\” இந்த ரிட் மனுவை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. மேலும் இது ஒன்றிய அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் எப்படி இந்த விவகாரத்தில் தலையிட முடியும்.
ஒரு கட்டிட திறப்பு விழாவுக்கும், இந்திய அரசியல் சாசன சட்டபிரிவு 79க்கும் என்ன தொடர்பு இருக்க முடியும். மேலும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கும், அதன் நிகழ்வுகளை அவர் தொடங்கி வைப்பதற்கும், அவரை அழைக்காமல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதையும் நாம் எப்படி தொடர்புப்படுத்தி பார்க்க முடியும் என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மனுதாரரான வழக்கறிஞர் ஜெய்சுகின்,‘‘ நான் இனிமேல் இதுதொடர்பாக எந்த நீதிமன்றத்தையும் நாடப்போவது இல்லை. அதனால் எனது ரிட் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட ரிட் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி திறக்க கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி appeared first on Dinakaran.
