×

செங்கோல் விவகாரம்.. திருவாடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ஆவேசம்

டெல்லி : புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்ததன் அடையாளமாக செங்கோல் திருவாவடுதுறை ஆதீனத்தால் மறைந்த நேருவிடம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பின் போது வழங்கப்பட்ட புத்தக தொகுப்பும் தற்போது விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. இந்த நிலையில் இவற்றை போலி ஆதாரம் என கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், வாட்ஸ் ஆப்பில் வெளியான கட்டுக்கதை மூலம் நாடாளுமன்றத்தை பாஜக புனிதப்படுத்துவதில் ஆச்சரியமில்லை என்று சாடி உள்ளார்.

ஆதாரமற்ற கூற்று மூலம் பாஜகவின் முரண்பட்ட நிலைப்பாடு மீண்டும் அம்பலமாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ஆதீனத்தால் இந்த செங்கோல் வடிவமைக்கப்பட்டு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேருவிடம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், இந்த செங்கோல் ஆங்கிலேயரின் ஆட்சி பரிமாற்றத்தின் அடையாளமாக வழங்கப்பட்டது என்று அப்போதைய வைஸ் ராய் மவுண்ட் பேட்டன், இந்தியாவின் கடைசி ஆளுநர் ராஜாஜி, அல்லது நேருவோ குறிப்பிட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே செங்கோல் பற்றிய காங்கிரஸ் விமர்சனத்திற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இந்த அளவுக்கு காங்கிரஸ் வெறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியா சுதந்திரம் பெற்ற போது செங்கோலின் முக்கியத்துவத்தை திருவாவடுதுறை ஆதீனம் எடுத்துரைத்து இருந்தும் காங்கிரஸ் ஆதீனத்தின் சரித்திரத்தை போலி எனக் கூறி அவமானப்படுத்தி இருப்பதாகவும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ட்விட்டர் பதிவில், “செங்கோலை நேருவின் கைத்தடி என காங்கிரஸ் குறிப்பிட்டு அவமதித்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு இந்திய சம்பிராதாயங்கள் மீது நம்பிக்கை கிடையாது. எனவே தான் செங்கோல் அதிகார மாற்றத்தின் அடையாளமாக மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து வாங்கப்பட்டதா? என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற சந்தேகங்களை காங்கிரஸ் கட்சி கிளப்புகிறது. இதுபோன்ற சந்தேகங்களை கிளப்புவது காங்கிரஸ் கட்சியின் வழக்கம். ஆதீனத்தின் வரலாற்றை போலி என தெரிவிப்பது காங்கிரசின் நடத்தையை காட்டுகிறது. திருவாடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது” என்றும் பதிவில் தெரிவித்துள்ளார்.

The post செங்கோல் விவகாரம்.. திருவாடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Union Minister ,Amit Shah ,Delhi ,Union government ,Amit Shah Avesam ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது...