×

1947ல் ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்படைத்ததன் அடையாளமாக செங்கோல் வழங்கப்படவில்லை: காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

டெல்லி: 1947ல் ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்படைத்ததன் அடையாளமாக செங்கோல் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மே 28-ல் நடக்கும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், 1947ல் ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்படைத்ததன் அடையாளமாக செங்கோல் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அப்போதைய மதராஸ் மாகாணத்தில் ஒரு மத ஸ்தாபனத்தால், மெட்ராஸ் நகரில் வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல் உண்மையில் ஆகஸ்ட் 1947ல் நேருவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் மவுண்ட்பேட்டன், ராஜாஜி மற்றும் நேரு ஆகியோர் இந்த செங்கோலை பிரிட்டிஷ் அதிகாரத்தை இந்தியாவுக்கு மாற்றியதற்கான அடையாளமாக விவரித்ததற்கு ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. 1947ல் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து செங்கோல் நேருவுக்கு வழங்கப்பட்டது மட்டுமே உண்மை.

செங்கோல் இப்போது பிரதமரும் அவரது பறை அடிப்பவர்களும் தமிழகத்தில் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஒன்றிய அரசு குறிப்பிட்டதற்கு எந்த ஆவணச் சான்றும் இல்லை. தமிழ்நாட்டின் அரசியலுக்காக செங்கோலைப் பற்றிய தகவலை திரிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையான கேள்வி என்னவெனில், புதிய பாராளுமன்றத்தை திறந்து வைக்க ஜனாதிபதி திரௌபதி முர்முவை ஏன் அனுமதிக்கவில்லை? என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

The post 1947ல் ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்படைத்ததன் அடையாளமாக செங்கோல் வழங்கப்படவில்லை: காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : . General Secretary ,Jairam Ramesh ,Delhi ,Congress ,Parliament ,. Secretary General ,
× RELATED தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்...