×

அரிமளம் அருகே எல்கை பந்தயம் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசு-சாலைகளில் சீறி பாய்ந்து ஓடிய வண்டியை பார்த்து மக்கள் மகிழ்ச்சி

திருமயம் : அரிமளம் அருகே மாட்டின் பல் அடிப்படையில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டு பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சாலைகளில் சீறி பாய்ந்து ஓடிய வண்டியை பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மாவடிபட்டி கிராமத்தில் செல்வமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மது எடுத்து திருவிழா நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் நடப்பாண்டு மது எடுப்பு திருவிழா நேற்று முன்தினம் முடிந்தது. விழாவை முன்னிட்டு மாவடிபட்டி கிராமத்தார்கள் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மாட்டின் பல் வரிசை அடிப்படையில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த வண்டி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, நேற்று காலை மாவடிபட்டி கிராமத்தில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பந்தயத்தில் கலந்து கொள்ள மாட்டு வண்டிகளுடன் வந்திருந்தனர்.

முதலாவதாக 4 பல் கொண்ட மாடுகளுக்கு பந்தயம் நடத்தப்பட்டது. பந்தய தூரம் போய் வர நான்கு மைல் நிர்ணயிக்கப்பட்டது. இதில் 20 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் பந்தயம் 2 பிரிவாக பிரித்து நடத்தப்பட்டது.இந்நிலையில் பந்தயங்களில் முடிவில் முதல் பரிசை தேனி மாவட்டம் வெண்டி முத்தையா, வலையன்வயல் அறிவு, 2 ம் பரிசு அழகியநாயகிபுரம் ஜே பி , தேனி தேவராஜ்நகர் தமிழ்செல்வி ராஜா, 3ம் பரிசு கே புதுப்பட்டி கே எ அம்பாள், பேராவூரணி அக்னி காளியம்மாள், 4ம் பரிசு பள்ளத்தூர் ஹரிகிருஷ்ணன், தேனி என்.டி. பட்டி தவப்புதல்வன் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வெற்றி பெற்றன.

தொடர்ந்து நடைபெற்ற 2 பல் கொண்ட மாடுகளுக்கான பந்தயத்தில் 3 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை தேனி மொக்க பாண்டி, 2ம் பரிசு வலையன்வயல் அறிவு, 3ம் பரிசு மாவடிபட்டி கூடையப்ப கருப்பன், 4ம் திருவாப்பாடி புல்லட் ராவுத்தர் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன.

பந்தயத்தின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. பந்தயமானது மாவடிப்பட்டி- கல்லூர் சாலையில் நடைபெற்றது. பந்தயத்தில் கலந்து கொண்ட இளம் காளை கன்றுகள் குதிரையை போல் சீறிப்பாய்ந்து ஓடியதை அப்பகுதியில் இருந்த மக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர்.

The post அரிமளம் அருகே எல்கை பந்தயம் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசு-சாலைகளில் சீறி பாய்ந்து ஓடிய வண்டியை பார்த்து மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Elkai Bet ,Arriama—people ,Arriam ,Beefs ,Elkai Racing ,Arama ,Dinakaran ,
× RELATED அரிமளம் அருகே குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம்