×

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் ஏசி பஸ் விபத்துக்கு டிரைவர் கவனக்குறைவு காரணம்-ஆய்வு செய்த அறங்காவலர் குழு தலைவர் தகவல்

திருமலை : திருமலை – திருப்பதி மலைப்பாதை சாலையில் நேற்று முன்தினம் நடந்த எலக்ரிக் ஏசி பஸ் விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறங்காவலர் குழு தலைவர் ஒய். சுப்பா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா மலைப்பாதை சாலையில் பஸ் விபத்து நடந்த இடத்தை நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்து நடந்த விதம் மற்றும் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் கூறுகையில், ‘பஸ்சில் தொழில்நுட்ப கோளாறு ஏதும் இல்லை என்று அதனை தயாரித்த ஒலக்ட்ரா நிறுவன பிரதிநிதிகளும், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் தெரிவித்தனர். அதிவேகம் அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம். எனவே இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஏழுமலையானின் அருளால் பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் உயிர் சேதம், பெரிய காயம் ஏற்படவில்லை.

இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் எலக்ட்ரிக் பஸ் ஓட்டுனர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருமலையில் இருந்து திருப்பதி வரக்கூடிய மலைப்பாதை சாலையோரம் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படும்’ என்றார்.இதில் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், போக்குவரத்து துறை பொது மேலாளர் சேஷா, போக்குவரத்து கழக மண்டல மேலாளர் செங்கல் மற்றும் ஒலக்ட்ரா எலக்ட்ரிக்கல் பஸ் தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

The post திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் ஏசி பஸ் விபத்துக்கு டிரைவர் கவனக்குறைவு காரணம்-ஆய்வு செய்த அறங்காவலர் குழு தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirupati hill ,Tirumala ,Tirumala – Tirupati mountain road ,Tirupati mountain road ,Dinakaran ,
× RELATED முகப்பேரில் மகப்பேறு அருளும் ஸ்ரீனிவாசப்பெருமாள்