×

ஊட்டியில் டிஎஸ்பிக்கள் பயிற்சி முகாம் பழங்குடியினரின் 2,600 எஸ்டி சான்றிதழ் உண்மை தன்மை இதுவரை சரிபார்ப்பு

*தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

ஊட்டி : பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எஸ்டி சான்றிதழின் உண்மை தன்மையை சரிபார்க்கக்கோரி கடந்த ஆண்டு வரப்பெற்ற 3,251 மனுக்களில் 2,600க்கும் மேற்பட்ட சான்றிதழ் சரி பார்க்கப்பட்டுள்ளது. நிலுவை மனுக்களும் விரைந்து சரி பார்க்கப்படும் என ஊட்டியில் நடந்த டிஎஸ்பிக்கள் பயிற்சி முகாமில் தமிழக டிஜிபி தெரிவித்தார்.

ஒன்றிய பழங்குடியினர் நல அமைச்சகம், தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நிதியுதவியுடன் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையம் சார்பில் தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடியினர்களின் நிலை குறித்தும், பழங்குடியினர் சாதி சான்று வழங்கும் முன்பு முறையாக சரிபார்ப்பது குறித்தும் அனைத்து மாவட்டங்கள் மற்றும் காவல் ஆணையர் அலுவலகங்களில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பிக்களுக்கான 2 நாட்கள் பயிற்சி முகாம் ஊட்டியில் உள்ள பழைய காவல் அலுவலகத்தில் நடந்தது.
முகாமில் பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை வரவேற்றார். சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி பிரபாகரன், நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: காவல்துறை என்பது பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க கூடிய துறை. பொதுமக்கள் என்றால் ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இருப்பார்கள். பட்டியலின மக்கள், பழங்குடியின மக்களும் அடங்குவர். இந்த பயிற்சி முகாமானது பழங்குடியின மக்களின் நலனுக்கானது. பழங்குடியின மக்கள் அளிக்கும் புகார்கள், அவர்கள் மீது வர கூடிய புகார்களை காவல்துறை எப்படி கையாள வேண்டும் என்பதற்காக இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறைக்கு கடந்த ஆண்டில் குற்ற வழக்குகள் மட்டுமின்றி 9.70 லட்சம் மனுக்கள் வர பெற்றுள்ளன. இந்த மனுக்கள் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் காவல்துறை மீது நம்பிக்கை வைத்து அவர்களின் குறைகளை நம்மிடம் மனுக்களாக வழங்கியுள்ளனர். இதில் பழங்குடியின மக்கள் அளித்த மனுக்களும் அடங்கும். பழங்குடியின மக்கள் அளித்த மனுக்கள் ஆய்வு செய்து கடந்த ஆண்டில் மட்டும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்டஹி பொறுத்த வரை 1.2 சதவீத மக்கள் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். பழங்குடியின மக்களின் குறைகள் என்ன, அவர்களுக்கான தேவை என்ன, அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முறையாக அறிந்து கொள்ள வேண்டும். 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டால் காரணமானவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் பழங்குடி சமுதாயத்தில் இது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதனால் நீதிமன்றம் அதுபோன்று திருமணம் நடைபெற்றால் வழக்குபதிவு செய்யலாம். பெற்றோர்களை கைது செய்ய அவசியமில்லை என தெரிவித்துள்ளது.

இதுபோன்ற தகவல்களை எல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே பழங்குடியின மக்கள் என்பவர்கள் யார் என்ற புரிதல் நமக்கு ேவண்டும். சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அனைத்து மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரக அலுவலகங்களிலும் உள்ளன. பழங்குடியின மக்கள் என்பதற்கான சான்றிதழ் எதற்கு தேவைப்படுகிறது என்றால் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திற்கும் தேவைப்படுகிறது. உண்மையான பழங்குடியின மக்களுக்கு தான் எஸ்டி.சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா? அல்லது தவறான தகவல் அளித்து பழங்குடியினர் அல்லாதவர், பழங்குடியினர் சான்று பெற்றுள்ளாரா? என்பதை காவல்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

இதுபோன்று பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எஸ்டி சான்றிதழ் உண்மை தன்மை குறித்து சரிபார்த்து தர கோரி கடந்த ஆண்டு 3,251 மனுக்கள் வரப்பெற்றன. இதில் 2,600க்கும் மேற்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு அவர்கள் பழங்குடியினர் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 360 மனுக்கள் மட்டும் நிலுவையில் உள்ளன. இம்மனுக்களும் விரைந்து சரி பார்க்கப்படும். எனவே நிலுவையில் உள்ள மனுக்களை காவல்துறை அதிகாரிகள் முறையாக விசாரித்து துரிதமாக சரிபார்ப்பு செய்ய வேண்டும். இதன் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட இதர பணிகளுக்கான விண்ணப்பிக்கும் பழங்குடியின மக்கள் உரிய காலத்தில் பயனடைய முடியும்.

தமிழகம் முழுவதும் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரக்கூடிய புகார்கள் மீது உடனுக்குடன் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. புலன் விசாரணை செய்து உண்மையான வழக்கு என்றால், உடனடியாக 90 நாளுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு டிஜிபி கூறினார்.இந்நிகழ்ச்சியில் ஊட்டி பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் உதயகுமார், டிஎஸ்பிக்கள் யசோதா, விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பயிற்சி முகாமில் பங்கேற்ற டிஎஸ்பிக்கள் பழங்குடியின கிராமத்திற்கு நேரடியாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.

The post ஊட்டியில் டிஎஸ்பிக்கள் பயிற்சி முகாம் பழங்குடியினரின் 2,600 எஸ்டி சான்றிதழ் உண்மை தன்மை இதுவரை சரிபார்ப்பு appeared first on Dinakaran.

Tags : DSPs ,Aboriginal ,Tamil Nadu ,DGB ,Silendra Babu ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்