×

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

*பள்ளி திறக்கும் நாளில் வழங்க ஏற்பாடு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு திட்டமிட்டபடி வரும் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டும் வரும் 5ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதையொட்டி, பள்ளிகளை தூய்மை செய்து தயார் நிலையில் வைத்திருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.அதற்காக, சம்மந்தப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகளை தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பள்ளிகள் திறக்கும் முதல் நாளன்றே, மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அனைத்தையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, ஏற்கனவே அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.திருவண்ணாமலையில் உள்ள ஒரு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பாடப்புத்தகங்கள், மாவட்டத்தில் உள்ள 18 வட்டார தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கும் நேற்று முதல் லாரிகள் மற்றும் வேன்கள் மூலம் அனுப்பும் பணிநடந்து வருகிறது.

அதைத்தொடர்ந்து, சம்மந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலகங்களில் இருந்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டில் இருந்து அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் நடைமுறைக்கு வருகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1544 ெதாடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் வழங்குவற்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Tiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...