×

சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் 31 இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 2023-24ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் 31 இடங்களுக்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் இன்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி, அன்னனூர், கோணம்பேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் அமைக்கப்படுவது தொடர்பாகவும், பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கரையான்சாவடி அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுவது தொடர்பாகவும் மற்றும் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, ராமாபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாகவும் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-24ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் விரைவுபடுத்த வேண்டுமென்ற உத்தரவின் அடிப்படையில் 50 இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் இன்றோடு 31 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கின்றோம். மீதமுள்ள 3 இடங்களையும் இந்த மாத இறுதிக்குள் நேரடியாகச் சென்று களஆய்வில் ஈடுபடவிருக்கின்றோம்.

இந்த 34 இடங்களிலும் நேரடியாக கள ஆய்வுக்குச் சென்று அமைக்கப்பட இருக்கின்ற விளையாட்டு மைதானமோ அல்லது பூங்காவோ, சலவைக்கூடமோ, பேருந்து நிலையமோ இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டிய இடங்களை அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களோடு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப., அவர்களும், சென்னைப் பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு.அன்சூல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்களும், அந்தந்த மாவட்டத்தினுடைய ஆட்சியாளர்களுடன் சென்று கள ஆய்வினை மேற்கொண்டு வருகின்றோம்.

அந்த வகையிலே இன்றைக்கு 34 இடங்களிலே 30-வது இடமாக பூந்தமல்லி சட்டப்பேரவைக்குட்பட்ட இந்த பகுதியில் விளையாட்டுத்திடல் அமைப்பதும், அதேபோல் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடத்தில் புதிதாக ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளிக்கூடத்தில் புதிய வகுப்பறைகளை கட்டிக்கொடுப்பதும், மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கேற்ப புதிதாக பூங்கா அமைத்துக் கொடுக்கின்ற பணிகளையும் இன்றைக்கு கள ஆய்வு மேற்கொள்ள வருகைதந்தோம். அந்தவகையில் அன்பிற்கினிய முன்னாள் அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்களும், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.கிருஷ்ணசாமி அவர்களும் இந்த கள ஆய்விலே பங்கேற்றிருக்கிறார்கள்.

மீதமிருக்கின்ற இன்னும் 3 இடங்களை கள ஆய்வு மேற்கொண்டு 34 இடங்களையும் முழுமையாக கள ஆய்வு செய்து, விரைவில் திட்ட அறிக்கையை தயாரித்து ஒப்பந்தப்புள்ளிக் கோரப்பட்டு மூன்று மாத காலத்திற்குள் இந்த 34 இடங்களிலும் பணிகளை துவக்க திட்டமிட்டிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். இதுவரையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் இல்லாத அளவிற்கு இந்த முறை 50 பணிகளை சட்டப்பேரவையிலே அறிவித்திருக்கின்றோம். இந்த 50 பணிகளையும் வேகப்படுத்தி தினந்தோறும் இந்த பணிகளை குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்குண்டான ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப., அவர்கள், சென்னைப் பெருநகர வளர்ச்சி‌க் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சூல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ்,இ.ஆ.ப. அவர்கள், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கிருஷ்ணசாமி அவர்கள், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.கணபதி அவர்கள், ஆவடி மாநகராட்சி மேயர் திரு.உதயகுமார் அவர்கள், ஆவடி மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள் திரு.ராஜேந்திரன், திரு.நாராயணபிரசாத், திரு.பேபி சேகர், திரு.பொன் விஜயன், பூவிருந்தவல்லி நகர்மன்றத் தலைவர் திருமதி.காஞ்சனா சுதாகர், துணைத்தலைவர் திரு.ஸ்ரீதர், பெருநகர சென்னை மாநகராட்சி நொளம்பூர் மண்டலக் குழுத் தலைவர் திரு.ராஜன், சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் திரு.எஸ்.ருத்ரமூர்த்தி, திரு.என்.ரவிக்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.சரஸ்வதி, மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

டெல்லியிலே நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பதில் அளித்து கூறுகையில் : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பொருத்தளவில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் காலத்திலிருந்து ஒன்றிய அரசை பொறுத்தளவில் உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடுதான் இயங்கி வருகின்றோம். அண்மையில் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடன் ஏற்பட்ட சர்ச்சையிலும் கூட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெளிவாக விளக்கிக் கூறினார். ஆளுநர் நண்பர் என்று சொன்னாலும் நட்புக்காக கொள்கையிலே சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று கூறினார்.

அந்தவகையிலே டெல்லியிலே நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் திராவிட முன்னேற்றக் கழகம், மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களை வைத்துத்தான் அந்த கட்டிடத்தை திறக்க வேண்டுமென்ற நிலைபாட்டில் உறுதியாக இருக்கின்றோம். நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கின்ற இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் அந்த கட்டிடத்தை திறந்து வைத்தால்தான் அது ஏற்புடையதாக இருக்கும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய நிலைபாடு. சென்னையிலே நேற்றைக்கு நடந்த ஒன்றிய நிதியமைச்சர் அவர்களின் நிகழ்ச்சியில் செங்கோல் தருவதற்குண்டான விளக்கத்தை எடுத்து கூறுகின்ற பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் என்ற முறையில் என்னை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க செய்தார்கள்.

“தமிழ், தமிழினுடைய கலாச்சாரம், தமிழினுடைய பெருமை, தமிழர்களுடைய பண்பாடு, மரபு இவைகளை பேணிக் காப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஓங்கி குரல் கொடுப்பதில் என்றைக்கும் சளைத்தவர்களாக இல்லை. அந்தவகையில் தமிழகத்திற்குண்டான பெருமை என்பதால் தமிழகத்தினுடைய பண்பாடு கலாச்சாரத்திற்கு ஒரு புகழ் என்பதால் தமிழகத்திலே உருவாக்கப்பட்ட இந்த செங்கோல் டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்திலே அமைய இருப்பதால் இதில் பத்திரிக்கை நிரூபர்கள் கூட்டத்தில் பங்கேற்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்தவிதமான சங்கடமும், வருத்தமும் இல்லை என்பதால் நேற்றைக்கு அதிலே கலந்துகொண்டோம்.

எங்களுடைய நிலைபாடு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைபாடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நிலைபாடு, டெல்லியிலே அமைய இருக்கின்ற நாடாளுமன்ற கட்டிடத்தை மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்கவேண்டுமென்ற நிலைபாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது.” இவ்வாறு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தெரிவித்தார்.

The post சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் 31 இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Chennai ,Chennai Metropolitan Development Corporation ,
× RELATED கொளத்தூர் தொகுதியில் 370 கர்ப்பிணி...