×

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும் : அன்புமணி ராமதாஸ்

சென்னை : புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும் என்று அன்புமணி அறிவித்துள்ளார்.டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா வரும் 28ம் தேதி நடக்கிறது. ரூ.1250 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

ஆனால், நாட்டின் முதல் குடிமகன் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இதற்கிடையே நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழா அழைப்பிதழ் அனைத்து எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டது. அதில், பிரதமர் மோடியே திறந்து வைப்பார் என்று அச்சிடப்பட்டு இருந்தது. அதோடு, அழைப்பிதழில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பெயரே இடம் பெறவில்லை. விழாவுக்கும் ஜனாதிபதி அழைக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி, என்சிபி, சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜேஎம்எம், தேசிய மாநாட்டு கட்சி, கேரள காங்கிரஸ்(எம்), ஆர்எஸ்பி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, ராஷ்டிரிய லோக் தளம் உட்பட 20 கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லியில் வரும் 28ம் நாள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்.” என்று பதிவிட்டுள்ளார்.

The post புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும் : அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : BAMAKA ,Anbumani Ramadoss ,Chennai ,Anbumani ,Delhi ,Dinakaran ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...