×

கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவு அலுவலகத்தை சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு மாற்ற வைகோ எதிர்ப்பு!!

சென்னை : கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.இதுக்குறித்து மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவிரி படுகை எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் தலைமை அலுவலகம், மையப்பகுதியான சென்னை எழும்பூர் தாலமுத்து – நடராஜன் மாளிகையில் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியான கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவு அலுவலகம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியினை மேற்கொண்டபோது, அப்போதைய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர் அவர்கள் மூலமாக அதை தடுத்து நிறுத்தினேன். இந்நிலையில் தற்போது எந்த முகாந்திரமும் இல்லாமல் மீண்டும் கிருஷ்ணா, கோதாவரி படுகைப் பிரிவு அலுவலகத்தை எந்தவிதமான வலுவான காரணமும் இன்றி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு மாற்ற முயற்சிப்பதாக தெரிய வருகிறது. அதனை உடனடியாகக் கைவிட வேண்டும்.

அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் கொண்ட இந்த அலுவலகத்தின் கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவில் தமிழக இளைஞர்கள் பலர் அதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள். இந்த அலுவலகம் மாற்றப்பட்டால், எண்ணற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகும். தற்போதைய கணினி யுகத்தில் இந்த மாற்றம் தேவையற்றது.எனவே, ராஜமுந்திரிக்கு மாற்றும் இந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவு அலுவலகத்தை சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு மாற்ற வைகோ எதிர்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Krishna ,VAICO ,Godavari basin division office ,Chennai ,Andhra Pradesh ,Godavari Basin Oil ,Natural Gas Companies ,Rajahmundry ,Krishna, Godavari Basin Divisional Office ,VICO ,Dinakaran ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...