சேலம், மே26: சேலத்தில்கோழிப்பண்ணைக்கு ஆம்னிவேனில் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கோவை மண்டல எஸ்பி பாலாஜி மேற்பார்வையில், சேலம் எஸ்ஐ வேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று வேடுகாத்தாம்பட்டி, சூரமங்கலம், பெரிய அம்மாபாளையம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேடுகாத்தாம்பட்டியில் நிறுத்தியிருந்த ஒரு ஆம்னி வேனை சோதனை செய்தனர். அதில், 30 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து ஆம்னி வேனுடன் 750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசியை கடத்தியவர்கள் குறித்து விசாரித்தனர். அதில், இனாம்வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ்(31), சிவதாபுரத்தை சேர்ந்த அசோக்குமார்(42) என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் வேடுகாத்தாம்பட்டியில் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி கோழிப்பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக தடுப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். இதனால், இலவச தொலைபேசி எண்ணில் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு ரேஷன் அரிசி கடத்தல் பதுக்கல் குறித்து தொடர்பாக புகார் அளிக்கலாம். பொதுமக்களின் புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். 18005995950 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணின் அறிவிப்பினை பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், முக்கிய சாலை சந்திப்புகள், சுங்கசாவடிபோன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
The post 750 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.