
பந்தலூர், மே 26: பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், அம்பேத்கர் மக்கள் இயக்க நெல்லியாளம் நகர செயலாளர் இந்திரஜித் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தை முழுவதுமாக நம்பி உள்ளனர். இந்நிலையில் பசுந்தேயிலைக்கான உரிய விலை கிடைக்காமல் தேயிலை விவசாயிகள் தவித்து வருகின்றனர். தேயிலை விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அரசு நிர்ணயிக்கும் விலையை விட மிக குறைந்த விலையே வழங்கி வருகின்றனர்.
இதனால் ஏழை விவசாயிகள், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கவும், தேயிலை தோட்டத்தை பராமரிக்க உரமிடவும் பணமின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். தேயிலை விலை குறையும் போது கடந்த காலங்களில் 1 கிலோவுக்கு 2 ரூபாய் வீதம் தேயிலைக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் மேலும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வன விலங்குகளின் தொல்லை, மழை-வெயில் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. தேயிலை விவசாயத்தை நம்பி இருக்கும் சிறு, குறு விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூடுதல் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
The post பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை appeared first on Dinakaran.