×

சரபோஜி மார்க்கெட்-வெள்ளைப்பிள்ளையார் கோயில் ரவுண்டானா வரை ரூ.18 கோடியில் புதிய சாலைப்பணி விரைவில் தொடங்கும்

தஞ்சாவூர், மே 26: தஞ்சாவூர் கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் இருந்து வெள்ளைப்பிள்ளையார் கோவில் ரவுண்டானா வரை ரூ.18 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் நேற்று காலை நடந்தது. மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பேசிய மண்டலக்குழு தலைவர் புண்ணியமூர்த்தி காவிரி சிறப்பு அங்காடி அருகே உள்ள மாலைநேர மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வாடகை வசூலிக்க வேண்டும் என்றார். அதற்கு பதில் அளித்த மேயர் சண்.ராமநாதன் விரைவில் ஏலம் விடப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கவுன்சிலர் வைஜெயந்திமாலா, பூக்கார விளார்சாலையில் குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் இருந்து சாக்கடை வடிகால் 3 அடிக்கு கீழே இருப்பதால் சாலை அரிப்பு ஏற்படுகிறது. எனவே நாஞ்சிக்கோட்டை சாலையில் கட்டியிருப்பதை போல் சாக்கடை வடிகால் கட்டி, புதிய சாலை போட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது ஆணையர் சரவணகுமார், பூக்கார விளார்சாலை, பழைய மாரியம்மன்கோவில் சாலை ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு புதிய சாலை வடிகால் வசதியுடன் போடப்படும் என்று பதில் அளித்தார். பள்ளத்து தெருவில் மழைநீர் வடிய சிரமமாக இருக்கிறது.

எனவே பாலத்தை மேம்படுத்தி தர வேண்டும். வீரவாண்டையார் தெருவில் புதிய சாலை போட வேண்டும் என்று கவுன்சிலர் கண்ணுக்கினியாள் பேசினார். திமுக கவுன்சிலர் உஷா, 39-வது வார்டில் புதிதாக மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. ஆனால் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை என பேசினார். அதற்கு பதில் அளித்த மேயர், ஒவ்வொரு வார்டுக்கும் 6 மின் விளக்குகள் வழங்கப்பட இருக்கிறது என்றார்.

ஜூன் 9ம்தேதி 24 கருடசேவை விழா நடக்கிறது. விழாவில் மானம்புச்சாவடி பகுதியில் உள்ள 3 பெருமாள்கள் கீழவாசல், வெள்ளைப்பிள்ளையார்கோவில் ரவுண்டானா வழியாக தான் வருவார்கள். அந்த சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. எனவே கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் இருந்து வெள்ளைப்பிள்ளையார் கோவில் ரவுண்டானா வரை புதிதாக சாலை அமைத்து தர வேண்டும் என்று உறுப்பினர் காந்திமதி வைத்த கோரிக்கைக்கு பதில் அளித்த மேயர் புதிதாக சாலை போட ரூ.18 கோடிக்கு டெண்டர் வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் 1 மாதத்தில் புதிய சாலை போடும் பணி தொடங்கப்படும். 12-வது வார்டில் மழைநீர் வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டும். மீன்களை ஏற்றி வரும் லாரிகளில் இருந்து வடியும் கழிவுநீர் வீதிகளில் தேங்கி நிற்கிறது. பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது என்று குறைகளை தெரிவித்த கவுன்சிலர் வெங்கடேசுக்கு, பதில் அளித்த மேயர். ரூ.20 கோடியில் மீன்மார்க்கெட் கட்ட கோரிக்கை வைத்து இருக்கிறோம். இன்னும் 6 மாதத்திற்குள் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த நிதி வந்தால் தரம் உயர்த்தப்பட்ட மீன்மார்க்கெட் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும். என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன் பேசுகையில், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற முதலில் ரூ.300-ம், அடுத்ததாக பிரதிகள் பெற வேண்டும் என்றால் ரூ.200 கொடுக்க வேண்டியது உள்ளது. இந்த சான்றிதழை இலவசமாக கொடுக்கலாமே என்றார். அப்போது கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பிறப்பு சான்றிதழை இலவசமாக கொடுக்கலாம். என்று ஆணையர் தெரிவித்தார்.

The post சரபோஜி மார்க்கெட்-வெள்ளைப்பிள்ளையார் கோயில் ரவுண்டானா வரை ரூ.18 கோடியில் புதிய சாலைப்பணி விரைவில் தொடங்கும் appeared first on Dinakaran.

Tags : Saraboji Market ,Vellaipillaiyar temple ,Thanjavur ,Thanjavur Khezhavasal ,Vellaipillayar Temple Roundabout ,Saraboji Market- ,Vellaipillaiyar Temple Roundabout ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...