×

சென்னை கிளையில் 3 கிலோ தங்கத்தில் மாதிரி செங்கோல் தாத்தாவின் உழைப்பு எங்களுக்கு பெருமையை தேடி கொடுத்துள்ளது: உம்மிடி பங்காரு உரிமையாளர்கள் பெருமிதம்

நாடாளுமன்றத்தை அலகரிக்கபோகும் செங்கோல் உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினரால் அப்போது சென்னையில் செய்யப்பட்டது. இந்த தங்க செங்கோலில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. இதன் அப்போதைய மதிப்பு ₹15,000 ஆகும். இந்த செங்கோல் நேருவிடம் ஒப்படைக்கும் போது, சிவனின் ஆசீர்வாதத்தை வழங்கும் விதமாக தேவாரத்திலிருந்து 11 பாடல்கள் ஓதப்பட்டது.

இந்த செங்கோலை தயாரித்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் குடும்பத்தை சேர்ந்த உம்மிடி எத்திராஜ் (96) தினகரன் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
நான் குழந்தையாக இருந்த போது ஜார்ஜ் டவுன் கோவிந்தப்பன் தெருவில் உள்ள எங்களுடைய இல்லத்திற்கு திருவாவடுதுறை ஆதீனம் வந்து என்னுடைய தாத்தாவை சந்தித்து, செங்கோல் வரைப்படத்தை கொடுத்து அதில் உள்ளது போல் தங்கத்தில் செய்து தரும்படி கூறினார். இதையடுத்து அந்த செங்கோல் செய்யும் பணி தொடங்கப்பட்டது. சுமார் 10க்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக பணியில் ஈடுபட்டு 20 நாட்களில் செங்கோல் தயாரிக்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

செங்கோலை தயாரிக்கும் வம்சாவளியை சேர்ந்த உம்மிடி அமரேந்தர் கூறியதாவது:
செங்கோல் எங்கள் குடும்பத்தின் சொத்து. என்னுடைய தாத்தாவின் உழைப்பு இன்று எங்களுக்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளது. இந்த செங்கோலின் பெருமையை கேள்விப்பட்டு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இது இருக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது எங்கள் குடும்பத்திற்கு மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறோம். இதுகுறித்த வரலாறு தொலைந்து போயிருந்தது. செய்தித்தாளில் வந்த தகவலின் அடிப்படையில் தான், செங்கோலின் அசல் அலகாபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகத்தில் உள்ளது தெரியவந்தது. அந்த அசல் அளவுகளை கணக்கிட்டு அது போன்ற மாதிரியை உருவாக்கி உள்ளோம்.

எங்களது குடும்பம் தயாரித்த பாரம்பரிய பொருட்களை சென்னை அண்ணா நகரில் உள்ள கிளைக் கடையில் காட்சிப்படுத்தினோம். என்னுடைய 96 வயதாகும் பெரியப்பா எத்திராஜ் செட்டியார் செங்கோலின் வரலாறு பற்றி விவரித்தார். நீதிக்கு நந்தியும் செல்வ செழிப்பிற்கு லட்சுமியின் உருவமும், கீழ் இருந்து மேல்நோக்கி கொடி போன்று பொறிக்கப்பட்டுள்ளது. செங்கோலில் இடம்பெற்றுள்ள நந்தி, லட்சுமி ஆகியோரின் உருவங்களும், தமிழ் வரிகளும், இறைவனின் அருள் ஆட்சியாளர்களை வழிநடத்தும் என்பதைக் குறிக்கிறது.
3 கிலோ தங்கத்தால் 5 அடி உயரத்தில் இந்த செங்கோல் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று செங்கோல் யாருக்கும் செய்து கொடுக்கும்படியான எண்ணம் இல்லை. அதே நேரத்தில் அரசு சார்பில் இதுபோன்று செங்கோல் வேண்டும் என்று கேட்டும் பட்சத்தில் அரசுக்கு மட்டுமே செய்து கொடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு உம்மிடி அமரேந்தர் கூறினார்.

The post சென்னை கிளையில் 3 கிலோ தங்கத்தில் மாதிரி செங்கோல் தாத்தாவின் உழைப்பு எங்களுக்கு பெருமையை தேடி கொடுத்துள்ளது: உம்மிடி பங்காரு உரிமையாளர்கள் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ummidi Bangaru ,Parliament ,Chetty ,
× RELATED இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எம்.பி....