×

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் குழந்தைகள், பாலூட்டும் தாய்மாருக்கு ₹2,765 கோடி செலவு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், பாலூட்டும் தாய்மார்களுக்கு கடந்த ஆண்டு ₹2,765 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படுத்தப்படும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டம். அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 6 வயது குழந்தைகள் 25,23,373 பேரும், 6,82,073 கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 46,063 வளரிளம் பெண்கள் ஆக மொத்தம் 32,51,509 பயனாளிகள் பயன் பெறுகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக செயல்படும் இத்திட்டத்திற்காக கடந்த ஆண்டு ₹2,765 கோடி செலவினம் மேற்கொள்ளப்படுள்ளது.

* 6 மாதம் முதல் 1 வயது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 125 கிராம் வீதம் சத்துமாவு 15 நாட்களுக்கு ஒரு முறை அரை கிலோ பாக்கெட்டுக்களாக வழங்கப்படுகிறது. அதனுடன் பிளாஸ்டிக் டப்பா வழங்கப்படுகிறது.
* 1 முதல் 2 வயது குழந்தைகளுக்கு, நாளொன்றுக்கு 125 கிராம் சத்துமாவு வீதம் 15 நாட்களுக்கு ஒருமுறை 500 கிராம் பாக்கெட்டுகளில் சத்துமாவு வழங்கப்படுகிறது. வாரத்திற்கு மூன்று முட்டைகள் வழங்கப்படுகின்றது.
* 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கூடுதலாக நாளொன்றுக்கு 60 கிராம் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
* குழந்தைகள் மையத்திற்கு வருகை தரும் 2 முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு ஏலக்காய் (அ) வெண்ணிலா (அ) ஸ்ட்ராபெர்ரி (அ) சாக்லேட் மணமூட்டப்பட்ட 50 கிராம் சத்துமாவில் கொழுக்கட்டை, கஞ்சி மற்றும் சத்துமாவு உருண்டையாக காலையிலும், மாலையிலும் வழங்கப்படுகிறது.
* வாரத்தில் 6 நாட்களுக்கு சத்தான உணவுகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
* கர்ப்பிணிகளுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் சுகாதார துறையின் மூலம் வழங்கப்படுகிறது.
* பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கான உணவூட்டும் முறைகள் பற்றி கற்றுதரப்படுகிறது.
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் முதல் 6 வயது வரையிலான 93,200 குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டது.

The post சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் குழந்தைகள், பாலூட்டும் தாய்மாருக்கு ₹2,765 கோடி செலவு: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Department of Social Welfare and Women's Rights ,Tamil ,Nadu Govt. ,CHENNAI ,Social Welfare and Women's Rights Department ,Tamil Nadu ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...