×

ரூ.175 கோடியில் அமைக்கப்பட்டு வரும் 364 அடுக்குமாடி தொழில் கூடங்கள் கொண்ட வளாகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: ரூ.175.18 கோடியில் கட்டப்பட்டு வரும் 364 தொழில் கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகங்கள் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலில் விரைவில் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் சார்பில் நடைபெறும் நிலையான கிளஸ்டர் மேம்பாடு-முழுமையான அணுகு முறை குறித்து விவாதிப்பதற்கான கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: தமிழ்நாடு, 49 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை(எம்எஸ்எம்இ) நிறுவனங்களை கொண்டு தொழில் துறையில் இந்தியாவிலேயே 3வது மிகப் பெரிய மாநிலமாக விளங்குகிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தவரையில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 9.22% ஜவுளியில் 19.4%, கார் ஏற்றுமதியில் 32.5%, தோல் ஏற்றுமதியில் 33% இந்த சாதனைகளுக்கு எல்லாம் உறுதுணையாகவும் அடித்தளமாகவும் விளங்குவது எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தியாவின் ஏற்றுமதியில் 8.89% பங்களிப்பை வழங்கும் தமிழ்நாடு ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தமிழ்நாட்டின் எம்எஸ்எம்இ ‘தொழில் நிறுவனங்களின் தரத்தினை உலக அளவில் உயர்த்திடும் வகையில் பெருங்குழுமத் திட்டம் Mega Clusters அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் – திருமுடிவாக்கத்தில் ரூ.33 கோடியே 33 லட்சம் அரசு மானியத்துடன் ரூ.47 கோடியே 62 லட்சம் திட்ட மதிப்பீட்டில், துல்லிய உற்பத்தி பெருங் குழுமமும், திண்டிவனத்தில் – ரூ. 71 கோடியே 56 லட்சம் அரசு மானியத்துடன் ரூ.155 கோடி திட்ட மதிப்பீட்டில், மருந்தியல் பெருங்குழுமமும் அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது, பணிகள் நடைபெற்று வருகிறது.

குறுந்தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழிற்பேட்டை அமைக்க நகர்ப்புறங்களில் போதிய நிலம் இல்லாத காரணத்தினாலும், நிலத்திற்கான முதலீட்டினை குறைக்கவும், உடனடியாக தொழில் தொடங்கவும், புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கிண்டி-ரூ.90.13 கோடியில்-152 தொழில் கூடங்கள், அம்பத்தூர்-ரூ.60.55 கோடியில்-112 தொழில் கூடங்கள், சேலம்- ரூ.24.50 கோடியில் – 100 தொழில் கூடங்கள் என மொத்தம், ரூ. 175 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 364 தொழில் கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, அசோசெம் தமிழ்நாடு கவுன்சிலின் மாநிலத் தலைவர், காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.அரவிந்தன் செல்வராஜ், கிராண்ட் தோர்டன் பாரத் பங்குதாரர் பேராசியர் பத்மானந்த், ஜி.டி பாரத் மேனேஜர் முகமத் சைதி, தொழில் முனைவேர், தொழில் அதிபர்கள், அசோசெம் தமிழ்நாடு மாநில கவுன்சில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.175 கோடியில் அமைக்கப்பட்டு வரும் 364 அடுக்குமாடி தொழில் கூடங்கள் கொண்ட வளாகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,Thamo Anparasan ,Chennai ,Tamil Nadu ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...