×

10 ஆண்டு கால அதிமுகவின் ஊழல் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு வந்த மொத்த முதலீடு வெறும் 0.70% தான்: எடப்பாடி பழனிசாமிக்கு, கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: கடந்த 10 ஆண்டு கால அதிமுகவின் ஊழல் ஆட்சியில், நாட்டுக்கு வந்த மொத்த முதலீடுகளில் தமிழ்நாட்டுக்கு வந்தது வெறும் 0.70 சதவீதம் தான் என்றும், முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு, கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில் அகில இந்திய அளவில் நாட்டிற்கு வந்த மொத்த முதலீடுகளில் தமிழ்நாட்டிற்கு வந்தது வெறும் 0.70 சதவீதம் தான். அதிமுக ஆட்சியில் முதலீட்டிற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு இல்லை என்ற நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட பல நிறுவனங்கள் வேறு வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டதை எவரும் மறுக்க முடியாது. இதற்கு காரணம் அதிமுக ஆட்சியில் நிலவிய ஊழலும், நிர்வாக திறமையின்மையும் தான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆனால் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 250க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கு அதிக அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. மிகுந்த ஈடுபாட்டோடு, பல தடைகளை கடந்து அந்நிய முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு செயலாற்றி வருகிற முதல்வரை பாராட்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post 10 ஆண்டு கால அதிமுகவின் ஊழல் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு வந்த மொத்த முதலீடு வெறும் 0.70% தான்: எடப்பாடி பழனிசாமிக்கு, கே.எஸ்.அழகிரி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tamil Nadu ,Edappadi Palaniswami ,KS Azhagiri ,Chennai ,
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...