×

விஷ சாராயம் அருந்தி 8 பேர் பலியான விவகாரம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி மகேஸ்வரி விசாரணை துவக்கம்: 2 கொலை வழக்குகள் பதிவு

சென்னை: தமிழகத்தை உலுக்கிய விஷ சாராயம் அருந்தி பலியானோர் விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி ஏடிஎஸ்பி மகேஸ்வரி நேற்று தனது விசாரணையை தொடங்கினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் விஷ சாராயம் அருந்தி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட சிலர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஷ சாராயம் அருந்தி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெருங்கரணை பகுதியை சேர்ந்த அஞ்சலையிடம் நேற்று மதியம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி மகேஸ்வரி தலைமையில், டிஎஸ்பிக்கள் வேல்முருகன், செல்வக்குமார் மற்றும் 10 பத்து பேர் கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும், சிகிச்சை பெற்றுவருபவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தனர். அதுமட்டுமில்லாமல், இவ்வழக்குகள் தொடர்பாக சித்தாமூர், அச்சிறுப்பாக்கம் காவல் நிலையங்களில் சம்பந்தப்பட்ட கோப்புகள் பெறப்பட்டு, அவற்றின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் சித்தாமூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. மகேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர், 2 வழக்கையும் கொலை வழக்காக மாற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் 4 வழக்குகள் உள்ளூர் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு வர வேண்டியுள்ளது. இதனால் அந்த வழக்கு வந்ததும், போலீசார் அதையும் கொலை வழக்காக பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

The post விஷ சாராயம் அருந்தி 8 பேர் பலியான விவகாரம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி மகேஸ்வரி விசாரணை துவக்கம்: 2 கொலை வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : CBCID ,ADSP ,Maheshwari ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு முன்னாள்...