×

சிங்கப்பூரில் தமிழர் கடையில் சூடாக காபி குடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அங்குள்ள முருகன் இட்லி கடைக்கு திடீரென சென்று காபி குடித்தார். அப்போது, அங்கிருந்தவர்கள் முதல்வருடன் செல்வி எடுக்க ஆர்வமாக கூடினர். அவர்களுடன் அவர் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று அங்குள்ள லிட்டில் இந்தியா பகுதிக்கு ஒரு விசிட் அடித்தார். அப்போது அங்கிருந்த முருகன் இட்லி கடையை பார்த்ததும், காரை நிறுத்தச் சொல்லி ஓட்டலுக்குள் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அங்கு ஸ்டிராங் மற்றும் சூடாக ஒரு காபிக்கு ஆர்டர் செய்து வாங்கி குடித்தார். முன்னதாக, கடையில் ப்பிட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வணக்கம் தெரிவித்தபடி காலியான ஒரு இருக்கையில் போய் அமர்ந்தார். அப்போது, அந்த கடையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரை தன் அருகே அமர வைத்து அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். குடித்த காபிக்கு காசு வாங்க மறுக்கப்பட்டபோதும் தன் கைப்பட காபிக்கு காசு கொடுத்து பில் வாங்கிக் கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் முருகன் இட்லி கடைக்கு சென்றார். அங்குள்ள மெனு கார்டை காபி குடித்துக் கொண்டே முதல்வர் மு.க.ஸ்டாலின் புரட்டிப் பார்த்தார். அந்த மெனு கார்டில் சிங்கப்பூர் மற்றும் தமிழ்நாட்டின் பெருமைகள் அடங்கிய புகைப்படங்களும் இடம்பெற்று இருந்தது. தமிழ்நாடு முதல்வர் முருகன் இட்லி கடைக்கு வந்த தகவல் பரவியதும், கடை முன்பு ஏராளமானவர்கள் கூடினர். கடையில் இருந்து வெளியே வந்து கார் ஏற சென்றபோது அங்கு கூடி இருந்தவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். அதில் பலரும் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

கூட்டம் எப்படி கூடியது என்றே தெரியாத அளவுக்கு மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க அங்குள்ள தமிழர்கள் திரண்டனர். இதையடுத்து வேறு வழியின்றி பொறுமையாக நின்று செல்பிக்கு போஸ் கொடுத்துவிட்டு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முதல்வர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை திடீர் திடீரென இதுபோன்ற சர்ப்ரைஸ்களை நிகழ்த்துவார். இப்படித்தான் கடந்த மாதம் கேரள மாநிலம் கொச்சின் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மீண்டும் விமான நிலையம் திரும்பும் வழியில் சாலையோர ஓட்டலில் மசால் தோசை சாப்பிட்டார். அதேபோல் சென்னையில் நேரம் கிடைக்கும்போது ஈசிஆரில் சைக்கிளிங் செல்லும்போது அங்கிருக்கும் தேநீர் கடைகளுக்கு திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சியூட்டுவார்.

அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள முருகன் இட்லி கடைக்கு மிகவும் கேசுவலாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காபி குடித்ததற்கு காரணமே, இதன்மூலம் லிட்டில் இந்தியா பகுதியில் பணியாற்றி வரும் தமிழர்களை, குறிப்பாக தமிழக இளைஞர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான். மேலும், சிங்கப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேன்ட், ஷர்ட் அணிந்து இளைஞர் போல் முருகன் இட்லி கடைக்கு சென்று வந்ததை சிங்கப்பூர் தமிழர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். முதல்வரின் திடீர் விசிட் செய்து காபி குடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

The post சிங்கப்பூரில் தமிழர் கடையில் சூடாக காபி குடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Singapore ,Chennai ,M.K.Stalin ,Murugan ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...