×

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் காலிறுதியில் கிடாம்பி: சிந்து, பிரணாய் முன்னேற்றம்

கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா ஓபன் சாம்பியன் குன்லவுத் விதித்சர்னுடன் (தாய்லாந்து) நேற்று மோதிய கிடாம்பி 21-19, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். ஏற்கனவே விதித்சர்னுக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்த அவர், முதல் முறையாக வென்று பதிலடி கொடுத்துள்ளார். காலிறுதியில் இந்தோனேசியாவின் கிறிஸ்டியன் அடினடாவுடன் கிடாம்பி மோத உள்ளார்.

நடப்பு ஆல் இங்கிலாந்து சாம்பியன் ஷி பெங் லி உடன் மோதிய இந்திய நட்சத்திரம் எச்.எஸ்.பிரணாய் 13-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துகொண்டு விளையாடிய பிரணாய் 21-16, 21-11 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி காலிறுதிக்குள் நுழைந்தார். அடுத்து அவர் ஜப்பான் நட்சத்திரம் கென்டா நிஷிமோடோ சவாலை சந்திக்கிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் களமிறங்கிய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து 21-16, 21-11 என்ற நேர் செட்களில் ஜப்பானின் அயா ஒஹோரியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஒஹோரியுடன் 13 முறை மோதியுள்ள சிந்து அனைத்து போட்டியிலும் வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காலிறுதியில் சீனாவின் ஸாங் யி மன் உடன் சிந்து மோதுகிறார்.

The post மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் காலிறுதியில் கிடாம்பி: சிந்து, பிரணாய் முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Kidambi ,Malaysia Masters Badminton quarterfinals ,Sindhu ,Pranai ,KUALA LUMPUR ,India ,Kitambi Srikanth ,Malaysia Masters Badminton Series.… ,Kitambi ,Dinakaran ,
× RELATED திருச்சி அருகே பெருகமணியில் வேளாண்....