×

அண்ணா பல்கலையில் தமிழ் பாடப்பிரிவுகள் நீக்கும் திட்டம் இல்லை: சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் இருக்கும்; துணைவேந்தர் வேல்ராஜ் உறுதி

சென்னை: அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் தமிழ்வழி பிஇ சிவில் மற்றும் மெக்கானிக்கல் பட்டப்படிப்புகளில் குறைந்த அளவில் மாணவர்கள் சேர்ந்ததால், அந்த படிப்புகளை ரத்து செய்ய அண்ணா பல்கலைக் கழக கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், பாடப்பிரிவுகள் மாற்றப்படாது என்று துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தில் சேரும் மாணவர்கள் வசதிக்காக தமிழ் வழியில் பிஇ படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஒவ்வொரும் ஆண்டும் மாணவர்கள் அதில் ஆர்வமுடன் சேர்ந்து படித்து வருகின்றனர். ஆனால் கடந்த ஆண்டில் அப்படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இதையடுத்து, தமிழ் வழிப்படிப்புகளை ரத்து செய்து விடலாம் என்று அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டக் குழு ஆலோசித்தது. அதற்கான பரிந்துரையை அந்த குழு அண்ணா பல்கலைக் கழகத்துக்கு தெரிவித்தது. அதன்படி அண்ணா பல்கலைக் கழக 11 உறுப்புக் கல்லூரிகளில் நடத்தப்படும் தமிழ் வழியிலான பிஇ சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் இந்த கல்வி ஆண்டில் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல ஆங்கில வழியில் நடத்தப்படும் பிஇ சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகள் 4 உறுப்புக் கல்லூரிகளில் ரத்து செய்யப்பட உள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கை கவுன்சலிங் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. அதனால், கடந்த ஆண்டுகளில் குறைந்த அளவில் மாணவர்கள் சேரும் பட்டப்படிப்புகளை ரத்து செய்துவிடலாம் என்று பல்கலைக் கழக பாடத்திட்டக் குழு ஆலோசித்தது. காரணம், 11 உறுப்புக்கல்லூரிகளில் கடந்த ஆண்டில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகளில் வெறும் 10 மாணவர்களே சேர்ந்துள்ளனர். இந்த படிப்புகளை நடத்துவதால் பல்கலைக் கழகத்துக்கும் அதிக செலவாகிறது. குறிப்பாக திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோவில், தூத்துக்குடி, கல்லூரிகளில் இது போன்ற நிலை உள்ளது. மேலும், ஆரணி, விழுப்புரம் கல்லூரிகளில் பிஇ மெக்கானிக்கல் படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல திண்டிவனத்தில் பிஇ மெக்கானிக்கல் மற்றும் சிவில் படிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருக்குவளை கல்லூரியில் ஆங்கில வழியில் நடத்தப்படும் பிஇ, இஇஇ படிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அரியலூர், பட்டுக்கோட்டை கல்லூரிகளில் ஆங்கில வழியில் நடத்தப்படும் பிஇ சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே இது போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் மாணவர்கள் சேர்வது குறித்து பல்கலைக் கழக கல்விக் குழு தெரிவித்து இருந்தும், அதை பல்கலைக் கழகம் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், தற்காலிகமாக அந்த படிப்புகளை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்தது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் திருக்குவளை மற்றும் ராமநாதபுரம் கல்லூரிகளில் மட்டும் தலா 26 சதவீதம் மற்றும் 22 சதவீதம் என்ற அளவில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டில் மேற்கண்ட தமிழ்வழிக் கல்வியில் பிஇ சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகளை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் புதிய படிப்புகளாக தொழில் கல்வியை நடத்தலாம் என்று பல்கலைக் கழகம் ஆலோசித்து வந்தது.

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 உறுப்பு கல்லூரிகள் உள்ளது. சிவில் மற்றும் மெக்கானிக் பாடப்பிரிவுகளில் 10க்கும் குறைவாக மாணவர் சேர்க்கை இருந்த இடத்தில் பாட பிரிவுகளை நீக்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தமிழ் வழி பாட பிரிவுகளை நீக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல. பொறியியல் படிப்புகளில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்யவில்லை. எனவே, புதிதாக பாடங்களை அறிமுகப்படுத்தவும் மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை தற்காலிகமாக நீக்கவும் திட்டமிட்டிருந்தோம். உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி இந்தக் கல்வி ஆண்டு எந்தப் பாடப்பிரிவும் நீக்கப்படாது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது. அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு பாடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி இந்தக் கல்வி ஆண்டு எந்தப் பாடப்பிரிவும் நீக்கப்படாது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது.

The post அண்ணா பல்கலையில் தமிழ் பாடப்பிரிவுகள் நீக்கும் திட்டம் இல்லை: சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் இருக்கும்; துணைவேந்தர் வேல்ராஜ் உறுதி appeared first on Dinakaran.

Tags : Anna University ,Vice ,Velraj ,Chennai ,Dinakaran ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...