×

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க எதிர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: இன்று அவசர விசாரணை

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மனு அவசர வழக்காக பட்டியலிடப்பட்டு இன்று விசாரிக்கப்படுகிறது. டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா வரும் 28ம் தேதி நடக்கிறது. ரூ.1250 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

ஆனால், நாட்டின் முதல் குடிமகன் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இதற்கிடையே நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழா அழைப்பிதழ் அனைத்து எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டது. அதில், பிரதமர் மோடியே திறந்து வைப்பார் என்று அச்சிடப்பட்டு இருந்தது. அதோடு, அழைப்பிதழில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பெயரே இடம் பெறவில்லை. விழாவுக்கும் ஜனாதிபதி அழைக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி, என்சிபி, சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜேஎம்எம், தேசிய மாநாட்டு கட்சி, கேரள காங்கிரஸ்(எம்), ஆர்எஸ்பி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, ராஷ்டிரிய லோக் தளம் உட்பட 20 கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில், ”இந்திய அரசியல் சட்டப்பிரிவு 79ன் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும், அதாவது மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றை உடனடியாக கூட்டவோ அல்லது கலைக்கவோ அதற்கான முழு அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு தான் உள்ளது. அதனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். அதுதான் மரபாகும். அதனை நிராகரிப்பது என்பது குடியரசுத் தலைவரின் மாண்பை குறைப்பது மட்டுமில்லாமல், அரசியலமைப்பு சட்டத்தையே மீறும் செயலாகும். அதனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு மக்களவை செயலகத்திற்கு ஒரு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் உடனடியாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த மனு அவசர வழக்காக பட்டியலிடப்பட்டு இன்று விசாரிக்கப்படுகிறது. நீதிபதிகள் ஜெ.கே.மகேஸ்வரி, நரசிம்மா ஆகி யோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு இந்த மனுவை விசாரிக்க உள்ளது.

The post புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க எதிர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: இன்று அவசர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Modi ,Supreme Court ,New Delhi ,President of the Republic ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு