×

வாய்ப்புக்காக காத்திருந்தேன்: ஆட்டநாயகன் ஆகாஷ் மத்வால் நெகிழ்ச்சி

சென்னை:ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் 3.3. ஓவர்களில் 5 ரன்னுக்கு 5 விக்கெட் எடுத்தார். இதன் மூலம் அவர் அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த ஆகாஷ் மத்வால் கடந்த ஆண்டு சூரிய குமார் யாதவ் காயம் அடைந்தபோது மாற்று வீரராக மும்பை அணிக்கு வந்தார். ஆனால் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய அளவில் வாய்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில் நடப்பு சீசனில் மே 3ம்தேதி தான் அவர் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு சிஎஸ்கேவுக்கு எதிராக ஒரு விக்கெட் குஜராத் அணிக்கு எதிராக 3 விக்கெட், ஐதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட் என கலக்கிய ஆகாஷ் மத்வால் நேற்று லக்னோக்கு எதிராக 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்திருக்கிறார். ஆகாஷ் மத்வால் பொறியியல் பட்டதாரி ஆவார். டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடி வந்த ஆகாஷ் மத்வால் ரிஷப் பன்டின் தயவால் கிரிக்கெட்டுக்குள் வந்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு சையது முஸ்தாக் கோப்பையில் அறிமுகமான ஆகாஷ் மத்வால் அதே ஆண்டு ரஞ்சிக்கோப்பையிலும் அதற்கு அடுத்த ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையிலும் அறிமுகமாகி இருக்கிறார். ஆர்சிபி அணியின் வலை பயிற்சி பந்துவீச்சாளராகவும் மும்பை அணியின் வலைப்பயிற்சி பவுலர் ஆகவும் ஆகாஷ் மத்வால் பணியாற்றி இருக்கிறார். இந்த சீசனுக்கு முன்பு 25 டி20 போட்டிகளில் விளையாடிய ஆகாஷ் மத்வால் 25 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

இதேபோன்று 10 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்த நிலையில் ஆட்ட நாயகன் விருதை வென்ற ஆகாஷ் மத்வால் கூறுகையில், நான் தொடர்ந்து பயிற்சி செய்து வந்து வாய்ப்புக்காக காத்திருந்தேன். கிரிக்கெட் மீது எனக்கு தீராத காதல் இருந்தபோதிலிருந்தே நான் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் பயிற்சி செய்தேன். இந்த வெற்றி எனக்கு பெருமையாக இருந்தாலும் நான் இன்னும் சிறப்பாக பந்து வீசுவேன் என நினைக்கிறேன். பும்ராவிடம் என்னை ஒப்பிடாதீர்கள். அவர் வேற லெவல். நான் இப்போதுதான் நன்றாக பந்து வீசத் தொடங்கி இருக்கிறேன். பொறியியல் பட்டதாரிகள் என்றும் ஒரு வேலையை விரைவாக கற்றுக் கொள்வார்கள் நானும் அப்படித்தான்’’ என்றார்.

The post வாய்ப்புக்காக காத்திருந்தேன்: ஆட்டநாயகன் ஆகாஷ் மத்வால் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Akash Madwal ,Chennai ,Akash Madhwal ,Mumbai team ,IPL T20 ,Chepauk, Chennai ,
× RELATED சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான நடமாடும் ஒப்பனை அறை அறிமுகம்..!!