×

கடமலை மயிலை ஒன்றியத்தில் கனமழையால் பாதிப்படைந்த விவசாய பயிர்கள்: உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

வருசநாடு: தேனி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலம் தவறிய பருவ மழை,போதிய மழை இல்லாமை உள்ளிட்டவைகளால் கண்மாய், குளங்களில் நீர் தேங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழையால் கிடைக்கும் நீர், அதற்கு அடுத்த ஆண்டு கோடைகாலம் வரை நீர் நிலைகளில் இருக்க வேண்டும். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக அதுபோல் இல்லாமல் கோடைக்கு முன்பே நீர் இல்லாமல் குளங்கள், கண்மாய்கள் வறண்டு காணப்படுகிறது.

தற்போது பெரும்பாலான கண்மாய், குளங்கள் நீர் இல்லாமல் முழுமையாக வறண்டு காணப்படுகிறது. மார்ச் முதல் ஜுன் வரை வெயில் இருந்தாலும் அக்னி நட்சத்திர காலத்தில் மட்டுமே கடுமையான வெயில் இருக்கும். இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே கடுமையான வெயில் அடிக்க தொடங்கியது. மார்ச் மாதத்தில் தொடர்ந்த கடும் வெயில் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. கடுமையான வெயில் அடிக்கக் கூடிய அக்னி நட்சத்திர காலம் மே மாதத்தில் வரவுள்ள நிலையில் தற்போதே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியது. அக்னி நட்சத்திர காலத்தில் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். ஆனால் அதே அளவிலான வெப்பத்தின் தாக்கம் இருந்தது. இந்நிலையில் கோடை வெயிலை சமாளிக்க கோடை மழை பெய்து வருகிறது.

கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ,வருசநாடு, தும்மக்குண்டு , வாலிப்பாறை, சீலமுத்தையாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடக்கிறது. இங்கு பீன்ஸ் அவரை, தென்னை, வாழை, தட்டப்பயிறு, மொச்சைப்பயிறு, எலுமிச்சை, சோளம், மக்காச்சோளம், கத்தரி ,தக்காளி, துவரை, உள்ளிட்ட விவசாய பயிர்களை விவசாயிகள் மானாவாரி மற்றும் தோட்டங்களில் பயிர் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் அனைத்தும் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் பாதிப்படைந்த பகுதிகளில் கடமலைக்குண்டு வேளாண்மைதுறை அதிகாரிகள் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் விவசாய பயிர்களின் பாதிப்பு குறித்து ஆய்வு பணியை மேற்கொண்டனர். ஆனால் இதுவரையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ள விவசாய பயிர்களாக இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி ,தட்டைப்பயிறு உள்ளிட்டவை உள்ளது. இவைகள் அனைத்தும் மானாவாரி நிலங்களில் விளையக் கூடிய விவசாய பயிர்கள் ஆகும்.இந்தாண்டு விவசாயம் பொய்த்து விட்டது. அதனால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கடமலை மயிலை ஒன்றிய விவசாயிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிராமவாசி தங்கமலை கூறுகையில், ‘‘கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழை தற்பொழுது பெய்தது.

இதனால் விவசாய பயிர்கள் மானாவாரி நிலங்களில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. மேலும் இரவு நேரங்களில் இலவம் பிஞ்சுகளை மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் அதிகம் சேதப்படுத்தி உள்ளது.’’ என்றார். தண்டியகுளம் கிராமவாசிகள் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடமலை மயிலை ஒன்றியத்தில் மழையில்லாமல் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. ஆனால் தற்போது பெய்த அதிக அளவு கனமழையால் விவசாய பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. பாதிப்படைந்த அனைத்து பயிர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க உதவி செய்ய வேண்டும்’’ என்றார்.

The post கடமலை மயிலை ஒன்றியத்தில் கனமழையால் பாதிப்படைந்த விவசாய பயிர்கள்: உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kadamala Mailai Union ,Varusanadu ,Theni ,Kanmai ,
× RELATED பன்றிகளை அப்புறப்படுத்த கோரிக்கை