×

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் குப்பை கழிவுகள் சேகரிக்கும் மையம் அமைக்கப்படுமா?: குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க வேண்டும்

பெரியகுளம்: தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள், 6 நகராட்சிகள், 22 பேருராட்சிகள் உள்ளன. பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப குப்பைக்கழிவுகளும் கிராமங்களில் பெருகியது. கடந்த அதிமுக ஆட்சியில் கிராமங்களில் தூய்மை பணிகள் தொய்வு ஏற்பட்டதால், அங்கன்வாடி மையம், சத்துணவு மையம், ஊராட்சி தொடக்கப் பள்ளிகள், கிராமங்களுக்கு பயன்தரக்கூடிய ஊருணிகள், குளங்கள், கண்மாய்களில் குப்பைக்கழிவுகள் குவிந்தது. இந்நிலையில், தமிழக அரசின் உள்ளாட்சித் துறையால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு ‘நம்ம ஊரு சூப்பர் திட்டம்’ மூலம் இன்று கிராமங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிட இரவு பகல் பாராமல், தேனி கலெக்டர் எடுத்த நடவடிக்கையால், பல கிராமங்கள் ‘பளீச்’ ஆக மாறிய உள்ளது. பல ஆண்டுகளாக புதைந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

இயற்கை வளத்தை கேள்விக்குள்ளாக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. தூய்மையை நோக்கி நகர்ந்த இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கிராமங்கள், நகரங்களில் குவியும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

தென்கரைப் பேரூராட்சி தாய் கிராமமாக தெ.கள்ளிப்பட்டி, அதனை தொடர்ந்து கைலாசப்பட்டி, சத்யாநகர், பாரதிநகர், ஜே.ஆர். ஆர். நகர், ஹவுசிங்போர்டு காலணி, சோத்துப் பாறை அணை குடியிருப்புகள் என பெரிய பரப்பளவு கொண்ட பேரூராட்சியாகும். இந்தப் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரியகுளம் கண்மாய்,பாப்பியம் பட்டி கண்மாய் ஆகியவைகளும் இருந்து வருகிறது. இது நாள் வரையில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பாலான தேர்தல்களில் திமுகவே இங்கே பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. 2021ம்ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தென்கரைப் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த நாகராஜ், துணைத்தலைவராக ராதா ராஜேஷ் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட வட்டக்கரடு என்னும் பகுதியில் சோத்துப்பாறை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், மற்றும் நீர்வளத்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது தென்கரை பேரூராட்சி பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றதோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்தனர். இந்நிலையில், தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளில் சேரும் குப்பைகளை, பேரூராட்சி சார்பில் வீடு வீடாக சேகரித்து சாலையோரங்களில் கொட்டி விடுகின்றனர். தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை, தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பை சேகரிக்கும் வாகனங்களைக் கொண்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கின்றனர். அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு பேரூராட்சி சார்பில் இடம் ஒதுக்கப்படவில்லை.

இதனால், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் குப்பை வாகன ஓட்டுனர்கள், தனியார் இடங்களிலும், சாலையோரங்களிலும், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களுக்கு அருகேயும் குப்பைகளை கொட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால், குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், குப்பை கொட்டும் மையத்தினை தேர்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தென்கரைப் பேரூராட்சிக்குட்பட்ட சோத்துப்பாறை அணை, கைலாசநாதர் கோவில் பகுதி, வட்டக்கரடு பகுதி என பெரும்பாலும் விவசாய பகுதி. இந்த பகுதியில் குப்பை சேகரிக்கும் மையம் மறுசுழற்சி மையம் ஆகியவற்றை உருவாக்கி அதன் மூலம் இயற்கை உரத்தை தயாரித்து மேற்படி விவசாய பகுதியில் பயன்படுத்த விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டுதல் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கை உரங்கள் கிடைக்கும்: தென்கரைப் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் கூறியதாவது, ‘‘திமுக அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார்.
இதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றியத்திலும் ரூ.பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தென்கரை பேரூராட்சி பகுதி வட்டக்கரடு பகுதியில் சோத்துப் பாறை கூட்டு குடிநீர் திட்டம், தார் சாலை அமைத்தல் பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. அதே போன்று தென்கரை பேருராட்சிக்குட்பட்ட பகுதிக்கு குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் மையம் ஒன்றை அமைக்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் இயற்கை உரங்களை விவசாய பகுதிக்கு பயன்படுத்த தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்’’ என்றார்.

கலைஞர் கொண்டு வந்த திட்டம்: இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘நகர்ப்புறங்களில் குப்பைகளே இருக்ககூடாது என்ற நோக்கத்துடன், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட வளர்ந்த வல்லரசு நாடுகளில்தான் குப்பைகளில் இருந்தும் உரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது. இதனை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநதி. கலைஞர் முதல்வராக இருந்த 2006-2011ம் ஆண்டு குப்பைகளில் உரம் தயாரிக்கும் திட்டத்திற்கு பெரும் முக்கியத்துவம் தந்தார். அனைத்து பேரூராட்சிகளிலும் வளர் மீட்பு பூங்கா என்ற பெயரில் குப்பைகளை உரங்களாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மு.க.ஸ்டாலின் முதல்வரான பின்பு அன்றாடம் சேரும் குப்பைகளில் இருந்து விவசாயத்திற்கு பயன்சேர்க்கும் வகையில் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.அதுபோல் தென்கரை பேருராட்சிக்குட்பட்ட பகுதிக்குகுப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் மையம் அமைக்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் இயற்கை உரங்களை விவசாய பகுதிக்கு பயன்படுத்தலாம்.’’ என்றார்.

The post பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் குப்பை கழிவுகள் சேகரிக்கும் மையம் அமைக்கப்படுமா?: குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : South Kadai Perusie ,Periyakulam ,Theni district ,Garbage Waste Collecting Centre ,South South Coast ,
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்