×

கொள்ளிடம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் நிலையில் நெற்பயிர்: மின்சாரம் சீராக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் கோடை நேரடி விதைப்பு பயிர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதி கடைமடை பகுதியாகும். இங்கு வருடம் தோறும் குருவை மற்றும் சம்பா சாகுபடி வழக்கமாக நடைபெற்று வருகிறது. குருவை சாகுபடி சுமார் 10,000 ஏக்கர் நிலப்பரப்பிலும், சம்பா சாகுபடி சுமார் 22,000 ஏக்கர் பரப்பளவிலும் சராசரியாக வழக்கமாக நடைபெற்று வருகிறது. குருவை சாகுபடியை பொறுத்தவரை ஆரம்ப காலகட்டத்தில் வாய்க்கால் மூலம் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்படுவது இயல்பான ஒன்றாக இருந்து வருகிறது.

வருடம் தோறும் ஜூன் மாதத்தில் தான் மேட்டூர் அணை திறந்து விடுவது வழக்கம். அதுவரை நிலத்தடி நீரை பயன்படுத்தி தான் விவசாயிகள் குருவை நேரடி விதைப்பு செய்வதும், ஒரு பகுதியில் நாற்றங்கால் விடுவதும் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் ஜூன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து வழக்கம்போல தண்ணீர் திறந்து விடப்படும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கொள்ளிடம் பகுதியில் குருவை நேரடி விதைப்பு பயிர் செய்யும் பணியிலும் நாற்றங்கால் அமைத்து விதைப்பு செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குருவை சாகுபடி பயிரை தற்போதைலிருந்து தொடங்கினால் தான் உரிய பருவ காலத்தில் தொடங்கியதாக அமையும். நல்ல மகசூலும் பெற முடியும். அதனை நம்பியே விவசாயிகள் இந்த வருடமும் குருவை சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர். வாய்க்காலில் தண்ணீர் வரும்வரை மின்மோட்டார்கள் அல்லது டீசல் என்ஜின்களை பயன்படுத்தி நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலையில் உள்ளது. அதன்படி கொள்ளிடம் பகுதியில் நேரடி விதைப்பு செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், 10 நாள் முதல் 15 நாள் வரை உள்ள காலகட்டத்தில் நேரடி விதைப்பு பயிர் தற்போது வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் நிலத்தடி நீரை மின் மோட்டார் மூலம் எடுத்து நேரடி விதைப்பு செய்த பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில், விவசாயிகள் மிகவும் சிரமத்தில் இருந்து வருகின்றனர்.

மின்சாரம் போதிய அளவுக்கு தொடர்ந்து கிடைப்பதில் தடை இருந்து வருவதால், நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. சில பகுதியில் குறைந்த மின் சக்தி உள்ள மின்சாரம் வருவதால் மின் மோட்டார் இயக்க முடியாத நிலையில், குருவை நேரடி விதைப்பு பயிருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் குருவை நெற்பயிர் வளர்ச்சி குறைவதுடன் வயலில் வெடிப்பு ஏற்பட்டு இளம் நெற்பயிற் கருகும் நிலைக்கு ஆளாகி வருவதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். கொள்ளிடம் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் வருடம் தோறும் சுமார் 1000 ஏக்கருக்கும் மேல் நிலப்பரப்பில் குருவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந் நிலையில் இந்த வருடம் 50 சதவிகித விவசாயிகள் குருவை சாகுபடி பயிர் செய்யும் காலத்தில் பருத்தி பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். மீதமுள்ள 50% நிலப்பரப்பில் குருவை நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆனால் அப்பகுதியில் குறைந்த மின்சக்தி மின்சாரம் மட்டுமே கிடைப்பதால் மின் மோட்டார் இயங்காமல் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் இளம் நெற்பயிர் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்னம் கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயியும், குன்னம் விவசாய சங்க தலைவருமான விசுவநாதன் கூறுகையில், கொள்ளிடம் பகுதியில் தற்போது பரவலாக குருவை நெற்பயிர் சாகுபடி செய்யும் பணி துவங்கி உள்ளது. மேட்டூர் அணை திறந்து விடும் வரை நிலத்தடி நீரை தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் பரவலாக கொள்ளிடம் பகுதியில் மின்சாரம் அடிக்கடி தடை ஏற்படுவதுவதுடன் குறைந்த சக்தி மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இளம் நேரடி விதைப்பு பயிர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குன்னம் கிராமத்தில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட ஏக்கர் நேரடி விதைப்பு பயிர் தண்ணீர் இன்றி வாடி வருகிறது.

எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறைந்த மின் சக்திக்கு பதிலாக, தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கியும் விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனே போதிய மின்சக்தி வழங்கவில்லை என்றால் குருவை நெற்பயிர் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

The post கொள்ளிடம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் நிலையில் நெற்பயிர்: மின்சாரம் சீராக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kollidham ,Kollidam ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் குறுவை சாகுபடி பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்