×

ஜல்லிக்கட்டு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் உற்சாகம்; நாட்டு மாடுகள் வளர்ப்பது மீண்டும் அதிகரிப்பு: தேடிப்பிடித்து வாங்கும் விவசாயிகள்

சேலம்: தமிழ்நாட்டின் முக்கியத்தொழில் விவசாயம். இந்த தொழிலில் முந்தைய காலகட்டத்தில் ஏர் உழுவதற்கு நாட்டு மாடுகளே அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. அப்போது ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் விதம்விதமான நாட்டு மாடுகள் இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பரிமாணமாக ஒரு கட்டத்தில் டிராக்டர், மோட்டார் என்று விவசாயத்தில் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. இதனால் விவசாயத்தில் நாட்டுமாடுகள், காளைகளின் பங்களிப்பு குறைந்து போனது. அதேநேரத்தில் ஜல்லிக்கட்டு விழாவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் காளைகளை வளர்க்க ஆரம்பித்தனர்.

இதற்கிடையில் அதிகரித்த மக்கள் தொகை பெருக்கத்தால், பாலின் தேவைக்கு ஏற்ப, கலப்பின பசுக்களை வளர்க்க ஆரம்பித்தனர்.நாட்டுமாடுகளை பராமரித்து வளர்ப்பதற்கான செலவுகள் அதிகம். ஆனால் போதிய வருமானம் இல்லை. அதே நேரத்தில் கலப்பின பசுக்களை வளர்த்தால் பால் விற்று லாபம் பார்க்கலாம்.இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நாட்டுமாடுகளை வளர்ப்பதற்கான ஆர்வம் விவசாயிகள் மற்றும் கால்நடை ஆர்வலர்கள் மத்தியில் குறைந்தது. இது ஒருபுறமிருக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடக்குமா? என்ற சூழல் உருவானது.

இதனால் நாட்டு மாடுகளை வளர்ப்பதில் அறவே பிரயோஜனம் இருக்காது என்று கால்நடை வளர்ப்பாளர்கள் முடிவு செய்தனர். ஒரு காலத்தில் தமிழகத்தில் 87 ரகங்களில் நாட்டு மாடுகள் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்ேபாது வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 37 நாட்டு மாட்டு ரகங்கள் மட்டுமே உள்ளன. இந்த மாட்டு ரகங்களிலும் பெரும்பாலானவை அழிவின் பிடியில் உள்ளது என்பது அதிர்ச்சிகரமான தகவல். இப்படிப்பட்ட நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.இதன்மூலம் அழிவின் பிடியில் சிக்கியுள்ள அரிய நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

இது குறித்து நாட்டு மாடுகள் வளர்க்கும் விவசாயிகள் கூறியதாவது: பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை அடைய வேண்டும் என்பதற்காக 1970ம் ஆண்டு வாக்கில் வெண்மைபுரட்சி என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக கலப்பினபசுக்கள் வளர்ப்பதை அரசுகள் ஊக்கப்படுத்தியது. இந்த திட்டத்தால் இந்தியா பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. அதே நேரத்தில் நாட்டின மாடுகள் வளர்ப்பதில் வீழ்ச்சியும் அங்கேதான் ஆரம்பித்தது. 20வது தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உள்நாட்டு மாடுகளின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்ற அளவில் குறைந்துள்ளது. 2012ம் ஆண்டில் 24.59லட்சம் என்ற அளவில் இருந்த நாட்டுமாடுகளின் எண்ணிக்கை 2018ம் ஆண்டு 18லட்சம் என்ற அளவில் குறைந்துள்ளது.

அதே நேரத்தில் வெளிநாட்டின மாடுகளின் எண்ணிக்கை 13.21லட்சம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. வழக்கம் போல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்குமா? என்ற கேள்வியும் இருந்தது. இதனால் நாட்டுமாடுகளை வாங்குவதற்கும், அவற்றை பராமரித்து வளர்ப்பதற்கும் மக்கள் தயக்கம் காட்டினர். ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது, தமிழ்நாட்டில் இனிமேல் எந்தவித தடைகளும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை அனைத்து பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தும் விழாக்குழுவினரும் முறையாக பின்பற்றி வருகின்றனர். இப்படி சட்டப்பூர்வமான உத்தரவு வந்துள்ளது நாட்டு மாடு வளர்ப்புக்கு ஒரு அங்கீகாரமாகவே கருதப்படுகிறது. இதனால் நாட்டுமாட்டினங்களை வளர்ப்பதில் மீண்டும் மக்களிடம் ஆர்வம் எழுந்துள்ளது. தற்போது பெரும்பாலான விவசாயிகளும், கால்நடை வளர்ப்பாளர்களும் சந்தைகளில் நாட்டு மாடுகளை ஆர்வத்துடன் தேடிப்பிடித்து வாங்கி வருகின்றனர். இதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் புதிதாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆர்வமானது அழிவின் பிடியில் சிக்கியுள்ள நாட்டு மாடுகளை மீட்டெடுப்பதற்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஜல்லிக்கட்டு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் உற்சாகம்; நாட்டு மாடுகள் வளர்ப்பது மீண்டும் அதிகரிப்பு: தேடிப்பிடித்து வாங்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Jallikattu ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...