×

மதுரை கூட்டுக்குடிநீர் தடுப்பணை பணிக்காக பெரியாறு அணையிலிருந்து திறக்கும் தண்ணீர் நிறுத்தம்

கூடலூர்: மதுரை கூட்டுக்குடிநீர் தடுப்பணை பணிக்காக, பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தமிழக பகுதிக்கான தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் எதிர்வரும் மக்கள் தொகையினை கணக்கிட்டு, அம்ருட் திட்டத்தின் கீழ், ரூ.1,296 கோடி மதிப்பில், முல்லை பெரியாற்றில் லோயர்கேம்ப் பகுதியிலிருந்து 125 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக லோயர்கேம்ப் பகுதியிலிருந்து பண்ணைப்பட்டி வரை சுத்திகரிக்கப்படாத குடிநீர், பிரதான குழாய் வழியாக பண்ணைப்பட்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சேர்க்கப்படும். பின் பண்ணைப்பட்டி முதல் மதுரை மாநகர் வரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிரதான குழாய் பதித்து மேல்நிலைத்தொட்டிகளில் நிரப்பி, மதுரை மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடிவு செயய்யப்பட்டுள்ளது.

இப்புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக கூடலூர் குருவனூற்று பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டப்படுகிறது. ஆற்றின் குறுக்கே பாதியளவு கட்டப்பட்டதோடு கடந்த ஒரு மாதமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் பணிகள் தொடங்கினால், ஜூன் மதத்தில் தொடங்க உள்ள முதல்போக சாகுபடி விவசாய பணிகளுக்கு தண்ணீர் எடுப்பதில் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து கூட்டுக்குடிநீர் தடுப்பணை பணிக்காக, பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டது. திடீரென தண்ணீர் நிறுத்தப்பட்டதால், தேனி மாவட்டத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக கூடலூர் குருவனூற்று பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் ஆற்றின் குறுக்கே பாதியளவு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மீதி பணிகளை தொடங்க, ஆற்றில் வரும் தண்ணீர் வழித்தடத்தை மாற்றி அமைக்க பணிகள் செய்கின்றனர். பணிகள் 2 நாட்களுக்குள் முடிவடையும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு வராது’’ என்றனர்.

The post மதுரை கூட்டுக்குடிநீர் தடுப்பணை பணிக்காக பெரியாறு அணையிலிருந்து திறக்கும் தண்ணீர் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Periyar dam ,Madurai ,Kudalur ,Tamil Nadu ,Madurai Joint Water Barrage ,Madurai Joint Water Dam ,Dinakaran ,
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...