×

அக்னி நட்சத்திர வெயில் தாக்கத்திலும் பொள்ளாச்சியில் சீதோஷ்ண நிலையில் மாற்றம்: மீண்டும் திரும்பிய பசுமை: விவசாயிகள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில், அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்திலும், சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் மீண்டும் பசுமை திரும்பியது. இதனால் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த ஆண்டில் பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து போதிய மழையில்லாமல் போனது. அதிலும் கடந்த பிப்ரவரி துவக்கத்தில் இருந்து ஏப்ரல் மாதம் 2வது வாரம் வரையிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வற்ற துவங்கியது. விவசாய நிலங்களில் ஈரப்பதம் குறைந்தது.

மேலும் ரோட்டோரங்களில் இருந்த செடி, கொடிகள் மட்டுமின்றி பல இடங்களில் மரங்களும் வாடி வதங்கியது. இதனால், கோடை மழை முன்னதாகவே பெய்யுமா? என்று, விவசாயிகள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் சில நாட்கள் குறிப்பிட்ட மணிநேரம் இடி, மின்னலுடன் கோடை மழை கன மழையாக பெய்தது. ஒரு சில நாட்கள் சூறாவளி காற்றுடன் மழை பெய்துள்ளது. இந்த மாதம் துவக்கத்தில் ஒரு சில நாட்கள் இரவு நேரத்தில் சிலமணிநேரம் சாரலுடன் மழை பெய்தது.

பகல் நேரத்தில் மழை இல்லாமல் இருந்தாலும், சில நாட்கள் நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை சாரல் மழை பெய்ததால், கிராமப்புற விவசாய விளைநிலங்களில் ஈரப்பதம் ஏற்பட்டது. அதில் உழவு பணி மேற்கொண்டு அடுத்த மழையை எதிர்நோக்கி, காய்கறி மற்றும் மானாவாரி சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகினர். ஒரு சில கிராமங்களில், மீண்டும் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் களமிறங்கி உள்ளனர். அதுபோல, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும், ஏப்ரல் இறுதி மற்றும் இந்த மாதம் துவக்கத்தில் அடிக்கடி கோடை மழை பெய்தது. டாப்சிலிப், பரம்பிக்குளம், ஆழியார் உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் சுற்றுலா பகுதி குளுமையாகி, சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போதும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கிராமப்பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் இருந்தாலும், கிராமப்புற விவசாய நிலங்கள் மற்றும் செடி, கொடிகள், மரங்கள் செழிப்புடன் உள்ளது.

அதிலும், ஆனைமலை, சேத்துமடை, ஆழியார், செல்லும் ரோட்டோரத்தில் உள்ள மரங்கள், தற்போது பச்சை பசேல் என பச்சை துண்டு போர்த்திய இடம்போல காணப்படுகிறது. மேலும் கிராமப்புற ரோட்டோரங்களின் இருபுறமும் உள்ள மரங்கள் பச்சை பசேல் என இருப்பது, பார்ப்பதற்கு அழகுடன் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பொள்ளாச்சி அருகே உள்ள சுற்றுலா பகுதிக்கு வரும் பயணிகள், கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண நிலை மாற்றத்தை கண்டு குதூகலம் அடைந்தனர்.

அதிலும், ஆழியார் மற்றும் வால்பாறை பகுதியில் ஊட்டியை போன்று குளுமையும் இருப்பதை கண்டு, வெளியூர் பயணிகள் ஆர்ப்பரிக்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால், தமிழகம் மட்டுன்றி, வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும், பொள்ளாச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை, கோடை விடுமுறை நிறைவடைந்தும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

The post அக்னி நட்சத்திர வெயில் தாக்கத்திலும் பொள்ளாச்சியில் சீதோஷ்ண நிலையில் மாற்றம்: மீண்டும் திரும்பிய பசுமை: விவசாயிகள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Sitoshna ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...