×

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பங்கேற்கும்: ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!

ஆந்திரா: பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகான் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆகையால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்த ஒன்றிய அரசு, ராஜபாதை சீரமைப்பு, துணை குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், ஒன்றிய செயலகம் உள்ளிட்டவை அடங்கிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்டியுள்ளது.

சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக கட்டப்பட்டு வரும், இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதனிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக அறிவித்துள்ளது. இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட 19 கட்சிகள் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று கூறிய அவர், ஜனநாயகத்தின் உண்மையான உணர்வோடு ஒய்ஆர்சிபி கலந்து கொள்ளும் என்றார். இதேபோல் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பங்கேற்கும்: ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : YSR Congress ,Parliament Building ,Jagan Mohan Reddy ,Andhra ,Modi ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் கடத்தலில் பாஜ, தெலுங்கு...