×

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க மக்களவை செயலகத்துக்கு உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க மக்களவை செயலகத்துக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

கட்டுமான பணிகள் நிறைவடைந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க கூடாது எனவும், குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. மேலும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக ஏற்கனவே கூட்டாக அறிவித்துள்ள நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க மக்களவை செயலகத்துக்கு உத்தரவிட கோரி தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் தான் திறந்து வைப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் அவை தான் மரபு என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுநல வழக்கை துரிதமாக இன்றே விசாரிக்க கோரி முறையிடவும் வழக்கறிஞர் ஜெய்சுகின் திட்டமிட்டுள்ளார்.

The post புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க மக்களவை செயலகத்துக்கு உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Secretariat ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...