×

சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு; சிங்கப்பூரில் 3 முக்கிய நிறுவன தலைமை அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்ய ஆர்வமாக இருப்பதாக தகவல்

சென்னை: சிங்கப்பூரில் 3 முக்கிய தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தில் முதலீடுகளை செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வதற்கு தங்கள் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

சிங்கப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டமாசெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவுடன் தனியாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, டமாசெக் நிறுவன தலைமை செயல் அதிகாரியிடம், இந்தியாவில் தென் பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தெற்காசிய நாடுகளிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்தார்.
டமாசெக் நிறுவனம் தமிழ்நாட்டில் காற்றாலை உற்பத்தியில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளதற்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்ட முதல்வர், தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள காற்றாலைகளை வலுப்படுத்தவும், புதிய கடல் சார்ந்த காற்றாலைகளை நிறுவவும் டமாசெக் நிறுவனத்தை கேட்டுக் கொண்டார்.

தற்போது இளம் தொழில் முனைவோர்களை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருவதால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்ப பிரிவுகளில் புதிய தொழில்களை தொடங்கி வருகிறது. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் டமாசெக் நிறுவனம் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.இந்தியாவின் மொத்த உணவு பதப்படுத்தல் துறையில் தமிழ்நாடு தற்போது 8 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. தமிழ்நாடு அரசு உணவு பதப்படுத்தும் தொழில் பூங்காக்களை நிறுவுவதில் கவனம் செலுத்தி வருவதால், அவற்றில் டமாசெக் நிறுவனத்தின் முதலீடு தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், சிங்கப்பூரின் எதிர்கால உணவு பாதுகாப்பிற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று முதல்வர் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் பின்டெக் நகரம் என்ற நிதி நிறுவனங்களுக்கான தனியான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும், அவற்றிலும் டமாசெக் நிறுவனம் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு டமாசெக் நிறுவன தலைமை செயல் அதிகாரி, தமிழ்நாடு முதல்வர் முதலீடுகள் செய்ய அழைப்பு விடுத்த பல்வேறு துறைகளோடு மட்டுமின்றி, மீன்பிடி சார்ந்த தொழில் துறைகளிலும், உணவு பதப்படுத்தும் துறைகளிலும் தங்கள் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, செம்ப்கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிம்யின் வாங்க்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலக அளவில் செம்ப்கார்ப் நிறுவனம் சிறப்பான இடத்தை வகித்து வருவதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாடு இந்தியாவின் மிக முக்கியமான மாநிலம் என்றும், எரிசக்தி தொடர்பான பல்வேறு பிரிவுகளில் செம்ப்கார்ப் நிறுவனம் தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.குறிப்பாக, உந்தப்பட்ட நீர் சேமிப்பு திட்டங்களுக்கான வழிமுறைகளை தற்போது இந்திய அரசு எளிமையாக்கி உள்ளதால், பிபிபி முறையில் இந்த திட்டங்களை தமிழ்நாட்டில் செம்ப்கார்ப் நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் இணைந்து கூட்டாக நிறைவேற்றிட கேட்டுக் கொண்டார்.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதால், பசுமை எரிசக்தி உற்பத்திக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள்
தமிழ்நாட்டிற்கு தேவைப்படுவதை குறிப்பிட்டு, செம்ப்கார்ப் நிறுவனத்தின் தொழில்நுட்ப பலம் தமிழ்நாட்டிற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.பின்னர் கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சஞ்சீவ் தாஸ்குப்தாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். கேப்பிட்டா லேண்ட் நிறுவனம் பல்வேறு புதிய தளங்களில் கால் பதித்து வருவதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். உலகின் மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து சிங்கப்பூரில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனம் வடிவமைத்துள்ள ‘சிங்கப்பூர் சயின்ஸ் பார்க்’ போன்ற பல்வேறு வகையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கட்டமைப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு ஆர்வமாக உள்ளதால் அவற்றில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்களிப்பையும் முதலீடுகளையும் அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இந்த நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, முதல்வரிடம் இந்நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வதற்கு தங்கள் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாகவும், விரைவில் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதாகவும் உறுதி அளித்தனர்.இந்த சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

‘சிங்கப்பூர் சயின்ஸ் பார்க்’ போன்ற பல்வேறு வகையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கட்டமைப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு ஆர்வமாக உள்ளதால் அவற்றில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்களிப்பையும் முதலீடுகளையும் அளிக்க வேண்டும்.

The post சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு; சிங்கப்பூரில் 3 முக்கிய நிறுவன தலைமை அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்ய ஆர்வமாக இருப்பதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Global Investors Conference ,MG Stalin ,Singapore ,Tamil Nadu ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Chennai World Investors Conference ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூரில் வாடகை பங்களா விவகாரம் 2...