×

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளான ஜீன்.3ம் தேதி அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாளை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஏப். 17ம் தேதி நடந்தது. அதில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிவிப்பில், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளன்றும் இனிப்பு

பொங்கல் வழங்கப்படும் என அறிவிப்பு செய்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதியின் பிறந்த தினத்தன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.

சத்துணவு/குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் மாணவியர்களுக்கு நாள்தோறும் சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும், இனிப்புப் பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றும் இதர பொருட்களை இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவினத்திற்குள் (எரிபொருள் நீங்கலாக) வாங்குவதற்கு அனுமதி அளித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளான 03-06-2023 அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சத்துணவு/குழந்தைகள் மையங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டிலுள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72 லட்சம் மாணவ, மாணவியர்களும் 54439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 லட்சம் குழந்தைகளும் இதன் மூலம் பயன் பெறுவர்.

மேலும், ஆணையினை செயல்படுத்துமாறு வட்டாரங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு உடனடியாக தக்க அறிவுரை வழங்குமாறு சென்னை மாநகராட்சி, முதன்மைச் செயலாளர் / ஆணையர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர், சமூக நல இயக்குநர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sugar Pongal ,Tamil ,Nadu Govt ,Chennai ,Chief Artist ,Tamil Nadu government ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...