×

16 ஏக்கரில் மெகா ஜல்லிக்கட்டு அரங்கம்; உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் கட்டுமான பணிகள் ‘விறுவிறு’

வடமஞ்சு விரட்டு…
ஜல்லிக்கட்டின் மற்றொரு வடிவமாக பெரியதொரு இடத்தில் தொழுவம் அமைத்து அங்கு காளைகளை நிறுத்தி தொடர்ந்து அவற்றை அவிழ்த்து விடும் மஞ்சுவிரட்டு நடக்கிறது. நடுவில் ஒரு தூணில் பெரிய வடம் கட்டி, தடிமனான கயிற்றில் வைக்கோல் பிரி சுற்றி இந்த வடம் உருவாக்கப்படும். இந்த கனமான வடத்தை காளை கழுத்தில் கட்டிவிடுவர். அதை தூக்கிக்கொண்டு சுற்றி வந்து அந்த காளை விளையாடும் வடமாடு மஞ்சுவிரட்டு அல்லது எருதுகட்டு பல ஊர்களில் நடத்தப்படுகிறது. இதுதவிர, தொழு மஞ்சுவிரட்டு என ஒரு விளையாட்டு உள்ளது. அதாவது தனித்தனி தொழுக்களில் காளைகள் இருக்கும். ஊர் மரியாதைக்காரர்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து திறந்துவிட்டு உறவுகளுக்குள்ளே பிடித்து பரிசுகள் பெறுவர். இப்படி காளை அடக்குதலில் பலதரப்பட்ட விளையாட்டுகள் இருப்பினும், வாடிவாசல் வழியாக அடுத்தடுத்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடுவதும், அவற்றை வீரர்கள் அடக்குவதுமான ஜல்லிக்கட்டு இந்த தமிழர் வீர விளையாட்டில் முதலிடம் பிடிக்கிறது. உச்சநீதிமன்றமே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை இல்லையென தீர்ப்பளித்து, இந்த விளையாட்டானது தமிழர் உணர்வில் நிறைந்து வழிகிற ஒரு பண்பாட்டு நிகழ்வுப் பெருமைக்குரியதென நிரூபித்திருக்கிறது.

‘அலங்காரநல்லூர்’ தெரியுமா…
மதுரையின் உச்சத்திருவிழாவான சித்திரைப் பெருவிழாவிற்கான அழகரை அக்காலத்தில் அலங்காரம் செய்வித்த ஊர் என்பதால் அலங்காரநல்லூர் என்றிருந்து, காலப்போக்கில் அலங்காநல்லூர் என பெயர் பெற்றது. இவ்வூரானது ஜல்லிக்கட்டு கிராமமாக உலகப்புகழின் உச்சத்தில், அத்தனை தமிழ் மக்களின் உச்சரிப்பில் வாழ்கிறது. ஒவ்வொரு தை மாதமும் மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் இவ்வூர் ஜல்லிக்கட்டு நடக்கிறது. பல நூற்றாண்டு தொன்மைக்குரிய இவ்விளையாட்டில் மதுரை உள்பட தென்மாவட்டங்கள் மட்டுமல்லாது, வடமாவட்ட பகுதிகளில் இருந்தும் 500க்கும் அதிகமான காளைகளும், ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும் பங்கேற்பது பெருமைமிக்கதாக இருக்கிறது.

நெருக்கடியும்… நெடிய இடத்திலும்…
அலங்காநல்லூரில் தற்போது ஜல்லிக்கட்டு நடக்கும் இடமும், வாடிவாசல் பகுதியும் இடநெருக்கடியில் இருக்கிறது. உலகளவில் பார்வையாளர்கள் வந்தும், அனைவருமே வசதியுடன் இப்போட்டியை கண்டு ரசிக்க முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டே, மதுரை அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கு அமைக்குமாறு கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான நிரந்தர அரங்கம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். அரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு 2022, ஜனவரி 21ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கென அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் 67 ஏக்கர் காலி இடம் கண்டறியப்பட்டு, இதில் 16 ஏக்கர் நிலம் இந்த அரங்கத்திற்கென ஒதுக்கப்பட்டு, இவ்விடத்தில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை வேகப்படுத்தியுள்ளது.

ரூ.44 கோடி செலவில்…
ரூ.44 கோடி செலவில் இந்த அரங்கம் கட்டப்படுகிறது. கடந்த பிப். 3ல் அரசாணை வெளியிடப்பட்டு, மார்ச் 18ல் துவங்கிய பணிகளை, டிச. 17ல் முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கண்காணிப்பில் பொதுப்பணித்துறையின் கீழ் ஈரோட்டை சேர்ந்த நிறுவனம் இதற்கான பணிகளை செய்து வருகிறது. ஜனவரி 2024ல் புதிய ஜல்லிக்கட்டு அரங்கில் உலகப்புகழ் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் வேலைகள் விறுவிறுப்படைந்துள்ளன.

வாடிவாசலுடன்…
அரங்கின் பிரதானமாக வாடிவாசல் அமைக்கப்படுகிறது. முனியசாமி கோட்டை என்றழைக்கப்படும் வகையில் பழமை மாறாத நிலையில் வாடிவாசல் அமைக்கப்படுகிறது. பொதுவாக வாடிவாசல் பகுதிக்குள் செருப்பு அணியக்கூடாது உள்ளிட்ட ஆன்மிகப் பழக்க வழக்கங்கள் இருக்கிறது. பல நூறாண்டுகள் முன்னதாக, நுழைவிடத்தில் இரண்டு கம்புகளை ஊன்றி, வேலி போட்டு அதன் வழியாகவே அடுத்தடுத்து மாடுகள் அவிழ்க்கப்பட்டன. அதன்பிறகே, மண்சுவர் வைத்து, மேலே கம்புகள் கட்டி பரண் அமைத்து அமர்ந்து, கீழே இருபுறமும் தென்னை மரத்தை பத்தடி உயரத்துக்கு நட்டு வைத்து, அந்த வாடிவாசல் வழியாக பின்னாலிருந்து மாடுகளைக் கொண்டு வந்து அடுத்தடுத்து விட்டுள்ளனர்.
தற்போது முன்புறம் இரு தென்னை மரங்களை 8 அடி உயரத்து கற்களை ஒட்டி இருபுறமும் நட்டு வைக்கப்படுகிறது. ஓரத்து கல்லில் மாடு கொம்பை முட்டி காயம் ஏற்படாது இருக்க இது அணைப்பாக இருப்பதால், இதற்கு ‘அணைமரம்’ என்ற பெயருண்டு. மேலும் உள்ளிருந்து காளை வரும்போது எந்தப்பக்கம் அதன் ஓட்டப் பார்வை இருக்குமென தெரிந்து வீரர்கள் பிடிக்கவும் இது உதவும். அணை மரம் பனைமரமாக வைத்தால், அதில் சிலும்பல் இருக்கும். இது மனிதரை, காளையை பாதிக்கும் என்பதால், பழமை மாறாமல் வழுக்கலாக இருக்கும் விதத்தில் தென்னை மரத்தை கொண்டே இது ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புது அணை மரம் அமைக்கும் வசதியிலும் அமைக்கப்படுகிறது. இந்த வாடிவாசலும் பழமை மாறாது ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

3,700 பேர் அமரலாம்…
புதிதாக அமைக்கப்படும் ஜல்லிக்கட்டு அரங்கம், 3 அடுக்குகள் கொண்டதாக அமைகிறது. இந்த அரங்கத்தில் 3,700 பேர் அமரும் வகையில் முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கைகள் அமைக்கப்படுகிறது. பிரம்மாண்ட நுழைவு வாயில் அமைகிறது.

பல்வேறு வசதிகள்….
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு அரங்க கட்டுமான பணிகளில் கூடுதல் கவனம் காட்டி, மிகச்சிறப்புடன் இக்கட்டுமானம் அமைவதற்கான பணிகளை வேகப்படுத்தி வருகிறார். மைதானத்தில் பெரிய விளையாட்டுப் பகுதி, நிர்வாக அலுவலகங்கள், வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்துவற்கான இடம், முதலுதவி மையம், மீடியா கேலரி, காளைகள் பதிவு மையம், உடை மாற்றும் அறைகளுடன் ஆடைகள் பாதுகாப்பிடம், காளை கொட்டகை, ஒய்வறைகளுடன், பயிற்சி மையம்.. இப்படி ஜல்லிக்கட்டுக்கென பலதரப்பட்ட பகுதிகளும், வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படுகிறது. நாட்டு மாடு வளர்ப்பு, தீவன விளைச்சல் குறித்த கருத்தரங்குகள் நடத்தவும் கூடங்கள், மழைநீர் வடிகால், நீரூற்று, செயற்கை புல்தரை மற்றும் 50 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் அமைகிறது. மேலும், தனிச்சியம் – அலங்காநல்லூர் சாலை 3.3 கி.மீட்டர் தூரத்திற்கு 10 மீட்டர் அகலத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் இணைப்புச் சாலையாக அமைக்கப்படுகிறது. வரும் ஆண்டின் ஜல்லிக்கட்டு இங்கு நடத்தப்படுவதுடன், நாட்டின் ஜல்லிக்கட்டுக்கான முக்கிய கேந்திரமாக இக்கட்டுமானம் அமையும்’’ என்றனர்.

பொன்னும்…பொண்ணும்…!
அக்காலத்தில் மன்னர்கள், ஜமீன்கள், நிலச்சுவான்தார்கள் என பலரும் காளையை அடக்கிய வீரமகன்களுக்கே, பெண் கொடுத்தனர். பொன்னும், மண்ணும் பரிசாக அளித்தனர். தகுந்த வயதடைந்த வாலிபர் துவங்கி இப்போட்டியில் யாரும் பங்கேற்கலாம். வீறுகொண்ட காளை வாடிவாசலில் கிளம்பியது முதல் அக்காளையின் திமிலைப் பிடித்தபடி சுமார் 50 அடிக்குள் விழாமல் சென்றாலே வெற்றிதான். வீரர்களிடம் பிடிபடாவிட்டால் காளைக்குப் பரிசு. பிடிபட்டால் காளையருக்குப் பரிசு. மனிதனையும், மாட்டையும் வீரத்தில் ஒரே தராசுக் கோட்டில் வைத்திருந்த தமிழ் சமூகத்தின் நேர்மைக்கு அடையாளமாகவும் இந்த வீர விளையாட்டு இருக்கிறது.

ஜல்லிக்கட்டு அருங்காட்சியகம்…
புதிதாக அமைக்கப்படும் அரங்கில் ஜல்லிக்கட்டு குறித்த அத்தனை விஷயங்களையும் கண்டறிந்து உணர்ந்து செல்லும் விதத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. தமிழர் வீர விளையாட்டின் தொன்மையை, இவ்விளையாட்டின் பெருமையை அடையாளப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம், காலம் கடந்தும் காத்து வைக்கும் பொக்கிஷமாக சிறப்பு கவனத்துடன் அமைக்கப்படுகிறது.

The post 16 ஏக்கரில் மெகா ஜல்லிக்கட்டு அரங்கம்; உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் கட்டுமான பணிகள் ‘விறுவிறு’ appeared first on Dinakaran.

Tags : Mega Jallikattu Arena ,Alankanallur ,Vadamanchu ,Vrattu… ,Jallikattu ,Alanganallur ,
× RELATED மண்டல பூஜை விழா