×

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு தடை?: அரசு ஆலோசித்து வருவதாக அமைச்சர் தகவல்

இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் காவாஜா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த 9ம் தேதி திடீரென துணை ராணுவ ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து இம்ரான் கட்சியின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகமும் உட்பட 10க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகள் தாக்கப்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், ‘‘ராணுவ நிலைகள் மீது தனது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு இம்ரான் இதுவரை எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தனக்கு இது தெரியாது என்கிறார். இது எதிர்பார்க்கப்பட்டது தான், மீண்டும் கைது செய்யப்பட்டால் இது போன்று நடக்கும் என்கிறார். இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகின்றது. இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எவ்வாறாக இருந்தாலும் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றார்.

முன்னாள் ராணுவ தளபதியின் பேத்தி கைது: கடந்த 9ம் தேதி லாகூர் கார்ப்ஸ் கமாண்டர் வீட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முக்கிய தூண்டுதலாக இருந்த பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி ஆசிப் நவாஸ் ஜாங்குவாவின் பேத்தி கதிஜா ஷாவை லாகூர் போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு பின் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு தடை?: அரசு ஆலோசித்து வருவதாக அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Tehrik ,Insaab Party ,Islamabad ,Tehrik e Insaf party ,Pakistan Tehrik e Insaab Party ,Dinakaran ,
× RELATED வீட்டு காவலில் இருந்த இம்ரான்கானின் மனைவி சிறைக்கு மாற்றம்