×

இந்தியா- ஆஸி. உறவை சீர்குலைப்பதை ஏற்க முடியாது: பிரதமர் மோடி பேட்டி

சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உள்ள நல்லுறவுக்கு தங்களின் செயல்கள் மற்றும் எண்ணங்களால் தீங்கு விளைவிப்பவர்களை ஏற்க மாட்டோம் என்று ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு 3 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிசிடம் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் அல்பானிஸ் முன்னிலையில் பேட்டி அளித்த பிரதமர் மோடி, நாங்கள் கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீதான தாக்குதல் மற்றும் பிரிவினைவாதிகளின் நடவடிக்கைகள் குறித்து விவாதித்திருக்கிறோம். இன்றும் இது குறித்து விவாதித்தோம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உள்ள நல்லுறவுக்கு செயல்கள் மற்றும் சித்தாந்தங்களின் மூலம் தீங்கு விளைவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் பிரதமர் அல்பானிஸ் ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் அவர், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்னிடம் மீண்டும் தற்போது உறுதியளித்து இருக்கிறார். இந்தியா -ஆஸ்திரேலியா உறவானது டி20 கிரிக்கெட் போன்று அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் எங்களது ஆறாவது சந்திப்பு இதுவாகும். இது இரு நாடுகளின் விரிவான உறவின் ஆழத்தையும், முதிர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. கிரிக்கெட் மொழியில் கூறவேண்டும் என்றால் இருநாடுகளின் உறவானது டி20 கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நட்பு சிறப்பு வாய்ந்தது. பிரதமர் அல்பானிஸ் உடனான இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானது. கடந்த ஆண்டு இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

இன்று ஒரு விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம். இது நமது பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் புதிய வழிகளுக்கு வித்திடும். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உறவு இரு நாடுகளின் பிராந்திய ஸ்திரதன்மை, அமைதி மற்றும் உலக நலனுடன் தொடர்புடையது. சுரங்கங்கள் மற்றும் முக்கியமான கனிம வளங்கள் குறித்து ராஜாங்க ரீதியிலான ஒத்துழைப்பை இருநாடுகளும் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது” என்றார்.

கிரிக்கெட் பார்க்க வாங்க: ஆஸ்திரேலிய பிரதமரும், கிரிக்கெட் ரசிகர்களும் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு வரவேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
பெங்களூரில் ஆஸி. தூதரகம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் கூறுகையில்,‘‘பெங்களூருவில் புதிய ஆஸ்திரேலிய தூதகரம் அமைக்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். . இது ஆஸ்திரேலிய வணிகங்களை இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் புதுமை சுற்றுச்சூழலுடன் இணைப்பதற்கு உதவும். இந்த மாதத்தில் திறக்கப்படும் தூதரகம் இந்தியாவில் ஐந்தாவது தூதரகமாகும். ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வற்காக இந்தியா செல்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

The post இந்தியா- ஆஸி. உறவை சீர்குலைப்பதை ஏற்க முடியாது: பிரதமர் மோடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Aussie ,PM Modi ,Sydney ,Australia ,Dinakaran ,
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!