×

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது: இரு அரசுகளும் இணைந்து செயல்படுவதாக பெருமிதம்

சென்னை: சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030-2031ம் நிதியாண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை லட்சிய இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதல்வர் கடந்த 23ம் தேதி பயணம் மேற்கொண்டார்.

இதையடுத்து சிங்கப்பூரில் டமாசெக், செம்ப்கார்ப், கேப்பிட்டா லேண்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தக துறை அமைச்சர் ஈஸ்வரன் ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த முதலீட்டாளர் மாநாட்டில் 250க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டின் மூலமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தொழில் வணிக ஆணையர் தாமஸ் வைத்யன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, ஐ-பி நிறுவனத்தின் செயல் தலைவர் யாவோ சியாவோ டங், சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழக தலைவர் சாங் டவ் சாங், எஸ்.ஐ.சி.சி.ஐ தலைவர் நீல் பாரிக், சிங்கப்பூர் தொழில்நுட்ப கல்வி கழகத்தின் முதன்மை செயல் அலுவலர் லிம் பூன் டியாங், சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தநிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பை பெரியளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளோம். அதேபோல, நான் இங்கு வந்துள்ளது உங்களையும், தமிழ்நாட்டுக்கு அழைக்கத்தான்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 சிங்கப்பூர் நிறுவனங்கள் உள்ளன. அசெண்டாஸ் நிறுவனம், தரமணியில் ஒரு மிகப் பெரும் ஐ.டி.பார்க், நிறுவியுள்ளது. டமாசெக், டி.பி.எஸ் வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் மாப்ல் ட்ரி போன்ற பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வணிகம் புரிந்து வருகின்றன. நீங்கள் அதிக அளவிலான முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

அதன் மூலம் தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் பரஸ்பரம் பயனடையும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே ₹4 ஆயிரத்து 800 கோடி முதலீட்டில் 4 சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்மூலம் 6 ஆயிரத்து 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு வகைப்பட்ட நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதுதான். அதில், தானியங்கி உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக், ஐ.டி, வர்த்தக மையம், தகவல் தொழில் நுட்பம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் பார்மா போன்ற பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. அதேபோல, மின் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற புதிய துறைகளிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எங்கள் மாநிலத்தின் சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதிசெய்யும் விதமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

Fintech City அமைப்பது போன்ற திட்டங்களைச் செயல்படுத்திட, உங்களின் இந்த ஆற்றலும், அனுபவமும் எங்களுக்கு மிகவும் தேவை. அதேசமயம் உங்களது வர்த்தக வரம்புகளும் விரிந்து பரவும், பெருகும். இதில், தொழில் பூங்காக்கள் மேம்பாடு, தொழில் நகரியங்கள், தொழில் பெருவழித் தடங்கள், துறைமுகங்களை மேம்படுத்துதல், நகர்ப்புற உள்கட்டமைப்பு, கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், சுற்றுலா தொடர்பான திட்டங்கள் ஆகியவற்றில், சிங்கப்பூரின் ஒத்துழைப்பு தமிழ்நாட்டிற்கு மிக அவசியம் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். உங்களின் மேலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக முதலீட்டாளர் மாநாட்டில் சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன் பேசுகையில், ‘‘தொழில் 4.0 நோக்கிய பயணத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க எங்கள் இரு அரசுகளும் இணைந்து செயல்படுகின்றன. அதேபோல, டிஜிட்டல் மயமாக்கல், ஆட்டோமேஷன், டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் இ-காமர்ஸ் ஆகியவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்கவும், உற்பத்தி அளவினை அதிகரிக்கவும், புதிய சந்தைகளை உருவாக்கவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உதவும்’’ என்றார்.

6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த எஸ்.ஐ.சி.சி.ஐ நிறுவனத்திற்கும் இடையே, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, பல்கலைக்கழக ஒத்துழைப்பு, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, தமிழ்நாட்டில் தொழில்துறைகளின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு போன்றவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
* சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுனத்திற்கும் இடையே, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
* சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகத்திற்கும் தமிழ்நாட்டின் FameTN மற்றும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷின் நிறுவனங்களும் இடையே, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப தொடர் கல்விக்கான திறன் மேம்பாடு, ஸ்டார்ட் – அப் தமிழ்நாடு மூலம் ஸ்டார்ட்-அப் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு கூட்டாண்மைகளை எளிதாக்குதல் போன்றவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Hi – P இண்டர்நெஷ்னல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே ₹312 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மின்னணு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் நிறுவனத்திற்கும் இடையே, தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் எதிர்கால மற்றும் தொழில்துறைக்கு தேவையான பாடத்திட்டம் மற்றும் பாட மேம்பாட்டிற்கான அறிவுப் பங்குதாரராக நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
* தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ஐ.டி.இ கல்வி சேவை நிறுவனத்திற்கும் இடையே, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி துறையில் நீண்ட கால கூட்டாண்மையை நிறுவுதல், தமிழ்நாட்டில் தொழிற்சாலை திறன் பள்ளிகளை அமைத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்றவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஜப்பானில் 6 நாள்
சிங்கப்பூரில் இன்று காலை நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினமே ஜப்பான் நாட்டிற்கு செல்கிறார். 6 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரவேண்டும் என்றும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்க உள்ளார். இதில் குறிப்பாக, ஒசாகாவில் உள்ள ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான ஜெட்ரோ நடத்தும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் கலந்துக்கொள்கிறார்.

மேலும், டோக்கியோவில் அந்நாட்டின் பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிஷுமுரா யசுதோஷி மற்றும் ஜப்பான் தொழில் நிறுவனமான, ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நொரிஹிகோ ஆகியோரை முதல்வர் சந்திக்கிறார். இதில், கியோகுடோ மற்றும் ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

The post சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது: இரு அரசுகளும் இணைந்து செயல்படுவதாக பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,investors' ,Singapore ,Chennai ,M. K. Stalin ,India ,M.K.Stalin ,Investors' Conference ,Dinakaran ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...