×

வள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலம் குமரி-வட்டகோட்டை இடையே புதிதாக சொகுசு படகு சவாரி: அமைச்சர் எ.வ.வேலு தொடக்கி வைத்தார்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழக அரசு ₹4 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ல் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய இரண்டு சொகுசு படகுகளை கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கியது. இரு சொகுசு படகுகளை கொண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சவாரி தொடங்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி இரண்டு சொகுசு படகுகளும் படகு துறையிலிருந்து வட்டகோட்டை வரை சென்று வரும். இந்த படகு பயணத்தை தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரியில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதேபோல விவேகானந்தர் பாறையையும், வள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கண்ணாடி இழை நடைபாலம் அமைக்கப்படுகிறது. பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது கீழே கடல் அழகை ரசிக்கும் படியாக வெளிநாடுகளில் உள்ளது போல அமைக்கப்பட உள்ளது. பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து தொடக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இந்த பாலம் அமைக்கும் பணி ஒரு வருடத்திற்குள் நிறைவடையும். க்ஷஅமைச்சர் எ.வ.வேலு விவேகானந்தர் பாறைக்கு படகில் சென்று அங்கு ₹33.80 கோடியில் படகு தள விரிவாக்க பணியை பார்வையிட்டார். அதற்காக கொண்டு வரப்பட்ட பார்ஜ் கப்பல் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டியில், ‘சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறைக்கு சென்ற பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகில் வருவதை தவிர்த்து இந்த பாலத்தின் மூலம் நடந்தே செல்ல முடியும். ஓராண்டு காலத்தில் இந்த கண்ணாடி இழை பாலப்பணிகள் நிறைவு பெறும். பாதுகாப்பாக, தரமான முறையில் இந்த பாலம் கட்டப்படும்’ என்றார். உடன், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் , குமரி மாவட்ட கலெக்டர் தர் உட்பட பலர் இருந்தனர்.

ஏ.சி படகு கட்டணம் ₹450
கன்னியாகுமரியில் இன்று தொடங்கி வைக்கப்பட்ட சொகுசு படகுகளுக்கு ஏசி வசதி கொண்ட இருக்கைக்கு ₹450 கட்டணம். ஏசி அல்லாத இருக்கைக்கு ₹350 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி படகு முழுவதும் ஏசி வசதி கொண்டதாகும். திருவள்ளுவர் படகு மொத்தம் 150 இருக்கைகளில் 131 இருக்கைகள் ஏசி அல்லாததும், 19 இருக்கைகள் ஏசி வசதி கொண்டதும் ஆகும். இந்த படகுகள் கன்னியாகுமரி படகு துறையில் இருந்து புறப்பட்டு வட்டகோட்டை வரை சென்று மீண்டும் படகுத்துறைக்கு திரும்பும்.

The post வள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலம் குமரி-வட்டகோட்டை இடையே புதிதாக சொகுசு படகு சவாரி: அமைச்சர் எ.வ.வேலு தொடக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Valluwar statue ,Vivekanandar ,Kumari ,Vattakota ,Minister A. Etb. Velu ,Nagarko ,Vivekanandar Memorial hall ,Kannyakumari ,Thiruvalluvar ,Valluvar Statue ,Vivekanandar Rock ,Glass Bridge ,Vrattakota ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...