×

விஷச்சாராயம் குடித்து 14 பேர் பலி: கைதான 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்

விழுப்புரம்: விஷச்சாராயம் குடித்து 14 பேர் பலியான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் கடந்த 13ம் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் மெத்தனால் கொடுத்த புதுச்சேரி ராஜா (எ) பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட், வானூர் பெரம்பை பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மீனவ கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட 11 பேரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை நேற்று வந்தபோது 11 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 26ம் தேதி மாலை 5 மணி வரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி புஷ்பராணி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து 11 பேரையும் சிபிசிஐடி போலீசார் அழைத்துச் சென்று தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷச்சாராயம் கடத்தலுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்தும், உடந்தையாக இருந்த காவல்துறை, வருவாய்த்துறையினர் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் மேலும் சிலர் கைதாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

The post விஷச்சாராயம் குடித்து 14 பேர் பலி: கைதான 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல் appeared first on Dinakaran.

Tags : CBCID ,Villupuram ,
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...