கோவை: தென்னை மரத்தில் இருந்து கள் இறக்குவது தொடர்பாக அனைத்து தரப்பினரிடையும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும் என வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். சர்வதேச சிறு தானிய கருத்தரங்கு மற்றும் எதிர்கால உணவு கண்காட்சியை கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். பின்னர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறு, தானிய ஆண்டு கண்காட்சியை திறந்து வைத்துள்ளோம். அங்கு, பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி புதிய ரக சிறு தானியங்கள், விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
சிறு தானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சிறு தானிய பயிர் செய்யப்படுகிறது. 38.2 மெட்ரிக் டன் உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதிய ரகங்கள், அதிக லாபம் தரக்கூடிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் புதிய பயிற்சியை மேற்கொள்ள ஆராய்ச்சி மாணவர்களை அனுப்ப திட்டம் துவங்கப்பட்டுள்ளது. துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங்குள்ள புதிய முறைகள் அறிந்து பயிலக்கூடிய பயிற்சி மேற்கொள்ள வசதியாக இத்திட்டம் பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்தாண்டு ரூ.50 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சிறு தானிய வளர்ச்சி, தரமான விதை ஆகியவற்றிற்கு ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னை கள் இறக்க விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரிடையும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
The post தென்னையில் இருந்து கள் இறக்க ஆலோசித்து முடிவு: அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.
