×

அதிகாலை 3 மணிக்கே நெல்லை வந்து சேருகிறது; கன்னியாகுமரி, கோவை எக்ஸ்பிரஸ்களின் வேகம் அதிகரிப்பு

நெல்லை: தென்மாவட்டங்களில் இரட்டை ரயில்பாதை நிறைவு பெற்ற நிலையில், கன்னியாகுமரி, கோவை எக்ஸ்பிரஸ்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இரட்டை ரயில் பாதை பணிகள் மதுரை முதல் நெல்லை வரை ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது. வாஞ்சி மணியாச்சி முதல் தூத்துக்குடி வரையும், நெல்லை முதல் நாகர்கோவில் வரையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தென்மாவட்டங்களுக்கு வரும் ரயில்கள் முன்பை விட வேகமாக இப்போது வந்து சேருகின்றன. அதன்படி வரும் 28ம் தேதி முதல் கன்னியாகுமரி மற்றும் கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.

அதன்படி கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்(எண்.22688) நெல்லைக்கு இதுநாள் வரை 3.20 மணிக்கு வந்து சேர்ந்தது. இனிமேல் அந்த ரயில் அதிகாலை 3 மணிக்கே நெல்லை வந்து சேரும். காலை 3.05 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு, வள்ளியூருக்கு 3.43 மணிக்கும், நாகர்கோவிலுக்கு காலை 4.50 மணிக்கு போய் சேரும். அதாவது 10 நிமிடங்கள் முன்னதாக நாகர்கோவில் போய் சேருகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்(எண்.12633) வரும் 28ம் தேதி முதல் நெல்லைக்கு அதிகாலை 3.45 மணிக்கு வருவதற்கு பதிலாக 20 நிமிடங்கள் முன்னதாக 3.20 மணிக்கே வந்து சேருகிறது. இந்த ரயில் வள்ளியூருக்கு 4.03 மணிக்கும், நாகர்கோவிலுக்கு 5 மணிக்கும், கன்னியாகுமரிக்கு 5.35 மணிக்கும் போய் சேருகிறது.

அதாவது கன்னியாகுமரி எக்ஸ்பிரசும் 10 நிமிடங்கள் முன்னதாக போய் சேருகிறது. குமரி மாவட்டத்திற்கு செல்லும் ரயில்களின் வேகம் அதிகரிப்பால் கன்னியாகுமரிக்கு சூரியோதயம் பார்க்க செல்லும் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதிகாலையிலே சென்று கடற்கரையில் சூரிய உதயம் பார்க்க வசதியாக இவ்விரு ரயில்களும் இனிமேல் இயக்கப்பட உள்ளன.

90 நிமிடங்களில் இயக்கி சாதனை
செங்கோட்டை- நெல்லை வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் காரணமாக, இவ்வழித்தடத்திலும் வேகமாக ரயில்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் (22ம் தேதி) செங்கோட்டை- நெல்லை இடையே 80 கிமீ தூரத்தை பாசஞ்சர் ரயில் 90 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தது. செங்கோட்டையில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட வேண்டிய பாசஞ்சர் ரயில், 6.35 மணிக்கு, அதாவது 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. அந்த ரயில் 90 நிமிடங்களில் குறித்த நேரத்தில் நெல்லை வந்து சேர்ந்தது. 15 ரயில் நிலையங்களில் அந்த ரயில் நின்று வந்தாலும், எக்ஸ்பிரஸ் ரயில்களை மிஞ்சும் அளவுக்கு வேகமாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post அதிகாலை 3 மணிக்கே நெல்லை வந்து சேருகிறது; கன்னியாகுமரி, கோவை எக்ஸ்பிரஸ்களின் வேகம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Paddy ,Kaniakumari ,Govai Expresses ,Kanyakumari ,Goai Expressors ,Goai Expresses ,Dinakaran ,
× RELATED சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!:...