×

மழை காலங்களில் போக்குவரத்துக்கு சிரமம்; மூல வைகை ஆற்றின் குறுக்கே பாலம் தேவை: பொதுமக்கள் வலியுறுத்தல்

வருசநாடு: வருசநாடு அருகே, மூல வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே தர்மராஜபுரம் கிராமம் உள்ளது. இந்த ஊர் அருகே மூல வைகை ஆறு செல்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வருசநாடு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல, மூல வைகை ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. மழை இல்லாத காலங்களில் பிரச்னை இல்லாமல் ஆற்றை கடந்து செல்கின்றனர். ஆனால், மழை காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, ஆற்றை கடக்க பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பாலம் கட்டுவது தொடர்பாக வருசநாடு கிராமசபை கூட்டங்கள், மயிலாடும்பாறை யூனியன் அலுவலகம், தேனி கலெக்டர் அலுவலகத்திலும் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தர்மராஜபுரம் உள்ளிட்ட பல கிராம மக்கள் மழை காலங்களில் ஆற்றை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மழை காலங்களில் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது. இது சம்பந்தமாக வருசநாடு சமூக ஆர்வலர் ஆசிரியர் வேல்முருகன் கூறுகையில், ‘எங்கள் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. தர்மராஜபுரம் மூல வைகை ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவது சம்பந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post மழை காலங்களில் போக்குவரத்துக்கு சிரமம்; மூல வைகை ஆற்றின் குறுக்கே பாலம் தேவை: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vaigai river ,Varasanadu ,Varasanadu river ,Dinakaran ,
× RELATED மானாமதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினார் வீரஅழகர்