×

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030-2031 நிதியாண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை ஒரு இலட்சிய இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024-ல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் 23.5.2023 அன்று பயணம் மேற்கொண்டார்.

இன்று (24.5.2023) சிங்கப்பூரில் தமிழ்நாடு முதலமைச்சர் Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் மாண்புமிகு சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தக துறை அமைச்சர் திரு. எஸ். ஈஸ்வரன் அவர்களையும் சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக, இன்று சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; உலகின் மிக அழகான மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றான சிங்கப்பூருக்கு வந்து உங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அழகிலும், அமைதியிலும் தலைசிறந்த நாடு, சிங்கப்பூர்! எதிலும் ஒரு ஒழுங்கு; நேர்த்தி; சுத்தம்! அதுதான் சிங்கப்பூர். நகர நிர்வாகத்தில் அதிகபட்ச தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி திறமையாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு மற்ற உலக நாடுகளுக்கு, சிங்கப்பூர் ஒரு தர அளவுகோலாகத் திகழ்கிறது.

இத்தகைய சிறப்புகள் பெற்ற சிங்கப்பூரின் கட்டமைப்பில் பல்வேறு வகைகளில் அங்கம் வகிக்கும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிங்கப்பூரை நாங்கள் வெளிநாடாக நினைப்பது இல்லை. ஏனென்றால் எங்களது தாய்மொழியாம் தமிழ் மொழி, ஆட்சி மொழியாக இருக்கும் நாடு சிங்கப்பூர். சிங்கப்பூருக்கும், தமிழ்நாட்டிற்கும் தொன்று தொட்டே சிறப்பான உறவு உள்ளது. சிங்கப்பூரின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தொடக்கநிலை முதல் இளநிலைக் கல்லூரி நிலை வரை தமிழ் இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப்படுகிறது என்பது தமிழ்ப்பேச்சே எங்கள் மூச்சு என்று வாழ்ந்து வரும் எங்களுக்கு ‘தேன் வந்து பாயுது எங்கள் காதினிலே’ என்பதைப் போன்ற இனிய செய்தி.

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரன் சென்னை வந்தபோது, என்னைச் சந்தித்தார். அவரது பண்பினால் மகிழ்ந்து போன நான், அடுத்த பயணமாக சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டேன். அவர் என்னைச் சந்தித்தபோது தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையிலான பொருளாதார உறவுகள், பண்பாடு மற்றும் வர்த்தகம் பற்றி மிக விரிவாகப் பேசினோம். தமிழ்நாட்டின் முக்கிய முதலீட்டாளர்களில் சிங்கப்பூரும் ஒன்று என்பதை, நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 சிங்கப்பூர் நிறுவனங்கள் உள்ளன. அசெண்டாஸ் நிறுவனம், தரமணியில் ஒரு மிகப் பெரும் IT Park நிறுவியுள்ளது. டமாசெக், DBS வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் MAPLE TREE போன்ற பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வணிகம் புரிந்து வருகின்றன.

சிங்கப்பூரை மையமாகக் கொண்ட நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். கடந்த இரண்டு வருடங்களில், தமிழ்நாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி, இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன்மூலம் 2 இலட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 4 இலட்சத்து 12 ஆயிரத்து 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முதலீட்டில் 4 சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்மூலம் 6 ஆயிரத்து 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் பல திட்டங்களுக்கு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், பல்வேறு வகைப்பட்ட நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதுதான். Electronics, Auto spare parts, Free trade economic zones, IT, Food Processing, ஃபார்மா, Textiles போன்ற பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. மின் வாகனங்களுக்கான Charging stations போன்ற புதிய துறைகளிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எங்கள் மாநிலத்தின் சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதிசெய்யும் விதமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நாங்கள் ஒவ்வொரு துறையையும் நன்கு ஆராய்ந்து, அத்துறைகள் சார்ந்து முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு, அவர்கள் தேவைகளைக் கண்டறிந்து நிறைவு செய்திடும் வகையில், பல்வேறு துறைகளுக்கான கொள்கைகளை வெளியிடுகிறோம். Fintech policy, R&D Policy, Aerospace and defence policy, Footwear and Leather product policy, Special scheme for Tech Textiles என பல கொள்கைகளை வெளியிட்டு இருக்கிறோம்.

எங்கள் மாநிலத்தில் Fintech city அமைப்பது போன்ற திட்டங்களைச் செயல்படுத்திட, உங்களின் இந்த ஆற்றலும், அனுபவமும் எங்களுக்கு மிகவும் தேவை. அதேசமயம் உங்களது வர்த்தக வரம்புகளும் விரிந்து பரவும்; பெருகும். தொழில் பூங்காக்கள் மேம்பாடு, தொழில் நகரியங்கள், தொழில் பெருவழித் தடங்கள், துறைமுகங்களை மேம்படுத்துதல், நகர்ப்புற உள்கட்டமைப்பு, கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், சுற்றுலா தொடர்பான திட்டங்கள் ஆகியவற்றில், சிங்கப்பூரின் ஒத்துழைப்பு தமிழ்நாட்டிற்கு மிக அவசியம் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். எங்களது முன்னேற்றப் பயணத்தில் இணைந்து, அதற்கான திட்டங்களை செயல்படுத்த சிறப்பான பங்குதாரராக சிங்கப்பூர் கைகோத்திட வேண்டும் என்றும் உங்களை கேட்டுக் கொள்கிறோம். இப்போது தமிழ்நாட்டில் முதலீட்டிற்கு உகந்த சூழ்நிலை மிக பிரகாசமாக இருக்கிறது. வளர்ந்த நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்து வரும் நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருகின்றன.

இத்துறைகளில், உங்களின் மேலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். இன்றைய தினம், சிப்காட் மற்றும் சிங்கப்பூர் இந்தியா கூட்டுத் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது.
இதன்மூலம், தரமான உள்கட்டமைப்புக்கான கொள்கைகள் மற்றும் அளவுகோல்களை உருவாக்குதல், சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்துதல், கழிவு நீர் மேலாண்மை, மலிவு விலையில் இல்லங்கள், உள்கட்டமைப்பு அமைப்பதற்கான நிதி வசதி, பசுமை மயமாக்கல் மற்றும் பசுமைக் கட்டடங்கள் போன்றவற்றை மேம்படுத்தி, அதன்மூலம், தொழில் பூங்காக்களின் தரத்தினை வெகுவாக மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வந்தாரை வாழ வைத்த சிங்கப்பூர் எங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தும் வளப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு கூறினார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள்

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI) நிறுவனத்திற்கும் இடையே, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, பல்கலைக்கழக ஒத்துழைப்பு, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, தமிழ்நாட்டில் தொழில்துறைகளின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு போன்றவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office – SIPO) மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுனத்திற்கும் இடையே, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகத்திற்கும் (Singapore India Partnership Office – SIPO), தமிழ்நாட்டின் FameTN மற்றும் TANSIM நிறுவனங்களும் இடையே, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப தொடர் கல்விக்கான திறன் மேம்பாடு, StartupTN மூலம் ஸ்டார்ட்-அப் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு கூட்டாண்மைகளை எளிதாக்குதல் போன்றவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Hi-P International Pvt. Ltd., நிறுவனத்திற்கும் இடையே 312 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மின்னணு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Singapore University of Technology & Design (SUTD) நிறுவனத்திற்கும் இடையே, தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் எதிர்கால மற்றும் தொழில்துறைக்கு தேவையான பாடத்திட்டம் மற்றும் பாட மேம்பாட்டிற்கான அறிவுப் பங்குதாரராக நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ITE Education Services நிறுவனத்திற்கும் இடையே, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி துறையில் நீண்ட கால கூட்டாண்மையை நிறுவுதல், தமிழ்நாட்டில் தொழிற்சாலை திறன் பள்ளிகளை அமைத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்றவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முதலீட்டாளர் மாநாட்டில், சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் பேசும்போது, தொழில் 4.0 நோக்கிய பயணத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க எங்கள் இரு அரசுகளும் இணைந்து செயல்படுகின்றன. டிஜிட்டல் மயமாக்கல், ஆட்டோமேஷன், டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் இ-காமர்ஸ் ஆகியவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்கவும், உற்பத்தி அளவினை அதிகரிக்கவும், புதிய சந்தைகளை உருவாக்கவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உதவும் என்று தெரிவித்தார். இந்த முதலீட்டாளர் மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., தொழில் வணிக ஆணையர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, Hi-P நிறுவனத்தின் செயல் தலைவர் யாவோ சியாவோ டங், Singapore University of Technology மற்றும் Design தலைவர் சாங் டவ் சாங், Singapore Indian Chamber of Commerce and Industries தலைவர்  நீல் பாரிக், Institute of Technical Education, Singapore முதன்மை செயல் அலுவலர் லிம் பூன் டியாங், சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..! appeared first on Dinakaran.

Tags : investors' ,Singapore ,Chief Minister ,M.K.Stalin ,M.K. ,Stalin ,India ,Investors' Conference ,Dinakaran ,
× RELATED உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024...