×

கிண்டி, ஜாம்பஜார், ஆர்.கே.நகர் மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வைத்திருந்த 6 பேர் கைது

 

சென்னை: கிண்டி, ஜாம்பஜார், ஆர்.கே.நகர் மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Adyar) தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (23.05.2023), கிண்டி ரேஸ் மைதானம் அருகில் கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த முகமது அசன், வ/19, த/பெ.அபுபெக்கர் சித்திக், கலைமான் நகர், காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3.2 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல D-4 ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (23.05.2023), காலை, திருவல்லிக்கேணி, ஜெ.ஜெ.கான் சாலையில் தீவிரமாக கண்காணித்து, அங்கு விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த யோவான், வ/23, த/பெ.முருகன், இருசப்பன் தெரு, இராயப்பேட்டை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி யோவான் மீது ஏற்கேனவே திருட்டு, வழிப்பறி உட்பட 4 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும், H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (23.05.2023), மாலை, மீனாம்பாள் நகர் மேம்பாலம் அடியில், போதை பொருள் வைத்திருந்த சந்தோஷ் (எ) சந்தோஷ்குமார், வ/24, த/பெ.விஜயகுமார், போஜராஜன் நகர், பென்சில் பேக்டரி, 2வது தெரு, பழைய வண்ணாரப்பேட்டை என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 70 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல, P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (23.05.2023), காலை, கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகர், குப்பைமேடு அருகில் கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 1.வேல்முருகன், வ/20, த/பெ.நடராஜன், நேதாஜி நகர் 6வது தெரு, தண்டையார்பேட்டை, 2.ஆல்பர்ட், வ/24, த/பெ.ஜான் சகாயராஜ், என்.எஸ்.கே.காலை, சீதாராமன் நகர் 1வது தெரு, கொடுங்கையூர், 3.ராஜேஷ் (எ) சின்ன பாம்பு, வ/22, த/பெ.ஆறுமுகம், எம்.ஜி.ஆர். நகர் 3வது தெரு, கொடுங்கையூர் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் 155 டைடல் உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி ஆல்பர்ட் மீது ஏற்கனவே 1 கஞ்சா வழக்கு உட்பட 3 குற்ற வழக்குகளும், ராஜேஷ் (எ) சின்ன பாம்பு P-6 கொடுங்கையூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 1 கொலை முயற்சி உட்பட 4 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மேற்படி 6 நபர்களும், விசாரணைக்குப் பின்னர், நேற்று (23.05.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post கிண்டி, ஜாம்பஜார், ஆர்.கே.நகர் மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வைத்திருந்த 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kindi ,Zambajar ,R. K.K. ,Nagar ,Kodungayur ,Kindy ,Zombajar ,Korangayur ,Dinakaran ,
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி