×

32 ஆண்டுகளுக்கு பிறகு சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்; ஹெலிகாப்டரில் மலர்கள் தூவப்பட்டது

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான 800 ஆண்டுகள் பழமையான சட்டைநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தையல்நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் நடந்து வந்தது. 82 யாக குண்டங்கள் அமைத்து 150 சிவாச்சாரியார்களால் யாகசாலை பூஜை கடந்த 20ம் தேதி துவங்கியது. இன்று காலை யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

காலை 10 மணியளவில் கோபுர கலசங்களில் தருமபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமி முன்னிலையில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது ஹெலிகாப்டரில் கோபுர கலசங்களில் பூக்கள் தூவப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. எஸ்பி நிஷா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கவர்னருக்கு கருப்பு கொடி: சட்டைநாதர் கோயிலில் நடந்த யாகசாலை பூஜையில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சிதம்பரம் வழியாக காரில் வந்தார்.

கொள்ளிடம் அடுத்த அரசூர் ரவுண்டானா பகுதியில் வந்தபோது மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டி கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் ைகது செய்தனர். அண்மையில் கவர்னர், மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை, வெளி நாட்டு கொள்கை என்று பேசினாராம். இதைக்கண்டித்து அவரை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர். இதைதொடர்ந்து கோயிலுக்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தருமபுர ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தார்.

The post 32 ஆண்டுகளுக்கு பிறகு சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்; ஹெலிகாப்டரில் மலர்கள் தூவப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Sirkazhi Chattainath Temple ,Sirkazhi ,Mayiladuthurai District ,Chattainath ,Dharmapura ,Atheenath ,
× RELATED அமைதியாக நடந்து முடிந்த நாடாளுமன்ற...