×

செய்யூரில் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் ஸ்ரீவல்மீகநாதர் கோயில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

செய்யூர்: செய்யூரில் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் ஸ்ரீவல்மீகநாதர் கோயில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். செய்யூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வல்மீகநாதர் கோயில் உள்ளது. 200 வருடம் பழமைவாய்ந்த இக்கோயில் அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் வளாகத்தில் குளம் உள்ளது. இக்குளம் இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த குளம் நாளடைவில் பராமரிப்பில்லாமல்போனது. இதனால் குளத்தை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும் கோடை காலத்திலும் வற்றாத குளத்து நீர் மாசடைந்துள்ளது. குளத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் குளக்கரையை குப்பை கொட்டும் இடமாக மாற்றியுள்ளனர்.

தினமும் குப்பை கொட்டுவதால் கோயில் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோயில் திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் கோயிலுக்குள் வரும் பக்தர்கள் முகம்சுழிக்கின்றனர். குடிநீர் ஆதாரமாக விளங்கிய இக்குளத்தை சீரமைத்து முறையாக பராமரிக்கவேண்டும் என பக்தர்கள் பலமுறை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் வல்மீகநாதர் கோயில் குளத்தை புனரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post செய்யூரில் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் ஸ்ரீவல்மீகநாதர் கோயில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Srivalmikanadar Temple Pond ,Purmani ,Deur ,Puthurmundi ,Chittoor ,Dookur ,Putharmanti ,Dudur ,
× RELATED செய்யூர் அருகே பரபரப்பு மண்குவாரி...